
அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி, ஜி பி முத்து, அருவி மதன், ஆதிரா, திலீப் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளியன்று (07/07/2023) வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “பம்பர்”. படத்தின் ட்ரெய்லர் ஓரளவு வரவேற்பு பெற்ற நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தூத்துக்குடியில் திருட்டு வேலை செய்து வருகிறார் வெற்றி. இவர்கள் நால்வரையும் போலீஸ் தேட, தப்பித்துக் கொள்வதற்காக ஐயப்பனுக்கு மாலை போடுகின்றனர்.
சபரிமலை கோவிலுக்குச் செல்கின்றனர் நால்வரும். அங்கு பரிதாபமான முகத்தோடு வயதான முஸ்லீம் நபரான ஹரீஷ் பெராடி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்த வெற்றி, அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கான பம்பர் லாட்டரி சீட்டினை வாங்குகிறார்.
போகும் சமயத்தில் அந்த லாட்டரியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார் வெற்றி. அதை எடுத்து வைத்துக் கொள்கிறார் ஹரீஷ். இந்த லாட்டரிக்கு பத்து கோடி ரூபாய் பம்பர் விழுகிறது.
தான் ஏழ்மையில் இருந்தாலும், மனிதநேயமாக செயல்பட்டு அந்த லாட்டரியை வெற்றியிடம் கொடுப்பதற்காக தூத்துக்குடி வருகிறார் ஹரீஷ். கடைசியாக தூத்துக்குடி வந்த ஹரீஷ், வெற்றியை தேடிக் கண்டுபிடித்தாரா.? பத்து கோடி வெற்றியை சென்றடைந்ததா.? பத்துகோடியை சுற்றித் திரிந்த கழுகுகளை வெற்றி அடையாளம் கண்டாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகன் என்று ஹரீஷ் பெராடியை கூறலாம். பல படங்களில் வில்லனாக தோன்றிய இவருக்கு, இப்படம் ஒரு மைல்கல் தான். என்னா ஆக்டிங்.. காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வடிவேலுவிற்கு மாமன்னன் எப்படியோ அப்படியாக ஹரீஷ் பெராடிக்கு ஒரு “பம்பர்”.
உடல்மொழியில் ஆரம்பித்து தனது பேச்சு மொழியிலும் தனி ஒரு கவனம் எடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
தனக்கு கொடுக்கப்பட்டத்தை வெற்றி அளவோடு செய்து முடித்திருக்கிறார். இவர் இதற்கு முன் நடித்த மற்ற படங்களை காட்டிலும், இப்படத்தில் நல்லதொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் என்றே கூறலாம்.
நாயகி ஷிவானி அழகாக வந்து தனது காட்சிகளில் உயிர் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஜி பி முத்துவின் துப்பாக்கி பாண்டி காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது. நண்பர்களாக மூவரும் தங்களது கதாபாத்திரத்தை நன்றாகவே நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக நடித்த அருவி மதன், தனது காட்சிகளில் உயிரோட்டமாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸுக்கே உரித்தான உடல்மொழியை அசால்ட்டாக கொண்டு வந்து நடித்திருக்கிறார்.
முதல் பாதி ஏனோதானோ என்று செல்லும் படமானது, இரண்டாம் பாதியில் ஓட்டம் எடுக்கிறது. நேர்மை, மத நல்லிணக்கம் இந்த இரண்டையும் கையில் எடுத்த இயக்குனர் தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் விதமாக படத்தினை இயக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக இப்படத்தின் இயக்குனர் செல்வகுமார் நிச்சயம் வலம் வருவார். அழகான கதையை அளவோடு எடுத்து ”பம்பர்”ஆக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற அயோத்தி என்ற படத்தினை கொண்டாடிய ரசிகர்கள், நிச்சயம் இப்படத்தினையும் கொண்டாடுவார்கள்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு தூண்கள்…
பாடலாசிரியர்கள் பாராட்டுக்குறியவர்கள்…
பம்பர் – பம்பர் ஹிட் …