Spotlightவிளையாட்டு

கடைசி நேரத்தில் டிக்.. டிக்..’; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா தோல்வி!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக 17 ஓவர்களாகப் போட்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் இன்னிங்ஸை ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் தொடங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ராகுல் 13 ரன்களுடனும், கோலி 4 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய தவான், 28 பந்துகளில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். அவர் 42 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழந்ததும் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பன்ட், தினேஷ் கார்த்திக் என அதிகம் பந்துகளைச் சந்திக்காத பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க, இந்திய அணியின் வெற்றிக்குக் கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களுக்கும் மேல் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், அந்த பிரஷரை தினேஷ் கார்த்திக் – பன்ட் ஜோடி எளிதாகக் கையாண்டது. குறிப்பாக ஆண்ட்ரூ டை வீசிய 14வது ஓவரில் இந்த ஜோடி தலா 2 சிக்ஸர்கள், பவுண்டரிகள் என 25 ரன்கள் குவித்தது. இதையடுத்து, கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிக்ஸ் வீசிய 15வது ஓவரில் 11 ரன்கள் எடுக்க, கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலைக்கு போட்டி சென்றது. தனது முந்தைய ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கிய டை, 16வது ஓவரைக் கட்டுக்கோப்பாக வீசினார். பன்ட் விக்கெட்டை இந்திய அணி இந்த ஓவரில் இழந்து, 11 ரன்களைச் சேர்த்தது.

இதனால், போட்டி பரபரப்பான கடைசி ஓவரை நோக்கி நகர்ந்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில், குர்ணால் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை ஸ்டாய்னிக்ஸ் வீசினார். ஸ்டாய்னிக்ஸ் வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த பாண்டியா, இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.

மூன்றாவது பந்தில் குர்ணால் பாண்டியா விக்கெட்டை இந்திய அணி இழந்தது. இதனால், கடைசி 3 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 4வது பந்தில் தினேஷ் கார்த்திக் வெளியேற இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தினேஷ் கார்த்திக், 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் இந்திய அணி 6 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button