
கார்ப
தமிழ் சினிமாவில் விதார்த் நடித்த 25வது படம் “கார்பன்”. இதுவரை விதார்த் நடித்த 24 படங்களில் ஏற்றம் பல இறக்கம் சில இருந்தாலும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணித்து வருவதற்காக விதார்த் அவர்களுக்கு ” தமிழ் வீதி” சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி….
கதைக்குள் பயணப்படலாம்,
நாயகன் விதார்த், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் கனவில் வருவது மறுநாள் நிஜத்தில் நடக்கும்.. இது அவருக்குள் இருக்கும் ஒரு சக்தி.
தான் படித்த படிப்பிற்கு வேலை தேடாமல், போலீஸ் வேலைக்கு தான் செல்வேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் விதார்த். இந்நிலையில், தாய் இறந்துவிட, வேலைக்குச் செல்லும்படி விதார்த்தை வற்புறுத்துகிறார் தந்தையாக வரும் மாரிமுத்து.
இனி வேலைக்குச் சென்று முதல் மாதம் சம்பளம் வாங்கும் வரை உங்களிடம் பேசவில்லை என்று தந்தையிடம் சத்தியம் செய்கிறார் விதார்த்.
நாட்கள் உருண்டோட, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறார் விதார்த். சென்னையில் குப்பை அள்ளும் லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மாரிமுத்துவிற்கோ தனது ஒரே மகன் விதார்த் மீது கொள்ளை பாசம்.
தனது பணியை பாதியில் துறந்து, அதில் வரும் பணத்தை பெற்று மகன் ஆசைப்பட்ட போலீஸ் வேலையை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்.
இச்சமயத்தில், மாரிமுத்து விபத்தில் சிக்கிவிட, கோமா நிலைக்குச் சென்று விடுகிறார். ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் பத்து இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் பெற முயல்கிறார் விதார்த்.. ஒருகட்டத்தில், அது விபத்தல்ல அப்பாவை கொல்ல நடந்த சதி என்று தெரிந்து கொள்கிறார் விதார்த்.
தனது சக்தியை வைத்து யார் அந்த கொலையாளி.? எதற்காக அப்பாவை கொலை செய்ய முயன்றனர்.? என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறார் விதார்த்.
நாயகன் விதார்த், வழக்கம் போல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தந்தையை காப்பாற்றும் போராட்டத்தில் மகனாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். காதல், ரொமான்ஸ் காட்சிகளுக்கு இன்னும் ட்ரெய்னிங்க் எடுக்கனும் விதார்த் சார்..
நாயகியாக வந்த தான்யாவின் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இன்னும் சற்று பெரிதான மெனகெடலை கொடுத்திருந்திருக்கலாம்.
இரண்டாம் நாயகனாக மனதோடு ஒன்றிருக்கிறார் மாரிமுத்து. மகனை பற்றி பேசும் போதும் சரி, பாசத்தை வெளிக்காட்டும் போதும் சரி அளவில்லா மகிழ்ச்சியை தந்து, தந்தை கதாபாத்திரத்தை தெகட்டல் இன்றி தெளிவாக பூர்த்தி செய்திருக்கிறார்.
இயக்குனர் ஆர் சீனுவாசன், தரமான கதையை கையில் எடுத்து அதை அழகாக நகர்த்தியிருக்கிறார். மாநாடு படத்தின் டைம் லூப் காட்சிகள் சில எட்டிப் பார்த்துச் செல்வதால், அந்த காட்சிகள் நமக்கு பெரிதான ஈர்ப்பை கொடுக்கவில்லை.
சாம் சி எஸ் அவர்களின் இசையில் பாடல்கள் ஜொலிக்கவில்லை. பின்னனி இசை அவரின் முந்தைய படங்களின் இசையே நினைவுக்கு வந்து செல்வது போன்ற இசையை தான் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஓரிரு காட்சிகளை தவிர, மற்ற இடங்களிலெல்லாம் சாம் அவர்களின் இசை எடுபடவில்லை..
விவேகானந்த் அவர்களின் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்திற்கு உறுதுணையக இருந்துள்ளது.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் பாராட்டும்படியாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
கார்பன் – வெற்றி கண்ட “கனவு” நாயகன் ..



