Spotlightசினிமாவிமர்சனங்கள்

‘Warrant’ A Tamil ZEE5 Originals Review 4/5

விலங்கு இணையத் தொடரின் இயக்குனரான பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களின் உதவியாளராக இருந்த விக்னேஷ் நட்ராஜன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் இந்த “வாரண்ட்”.

இந்த தொடரானது ஜீ5 இணையத்தில் வெளியாகியுள்ளது. மொத்தமாக எட்டு எபிசோட்களை உள்ளடக்கியது இந்த தொடர்.

வேர்ல்ட் ஆஃப் விலங்கு இந்த வாரண்ட் இணையத் தொடர் என்றே ஆரம்பமாகிறது.

இந்த தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், நம்ரிதா, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, வையாபுரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்திருக்கின்றனர்.

கதை திரைக்கதை மற்றும் எழுத்து இவை அனைத்தையும் பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் இணைந்து செய்துள்ளனர். இயக்கத்தை விக்னேஷ் நடராஜன் செய்திருக்கிறார். தயாரித்திருக்கிறார்கள் பிரசாந்த் பாண்டியராஜ், விஷால் மற்றும் ஆதீஸ்வர். பின்னனி இசையை கவனித்திருக்கிறார் சாம் சி எஸ். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராமர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

புதிதாக போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியில் சேர்கிறார் கதையின் நாயகனாக கோட்டை கருப்புசாமி (பிரசாந்த் பாண்டியராஜ்). ஆரம்பத்தில் காவலர் பணி அவருக்கு மிகவும் கடினமாக இருக்க, சக காவலர்கள் அனைவரும் கோட்டை கருப்புசாமியை கேலி செய்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், கைதி ஒருவன் கோட்டை கருப்புசாமியை தாக்கி விட்டு, தப்பி ஓடி விட, உயரதிகாரிகள் வரை அந்த செய்து சென்று, கோட்டை கருப்பசாமியை அனைவரும் திட்டி விடுகின்றனர்., அன்றிலிருந்து சக காவலர்கள் அனைவரும் கொட்டை என்றே அவரை அனைவரும் அழைக்கின்றனர்.

அதன்பிறகு, சின்னதாக ஒரு சம்பவம் நடக்க, நாம் யார் என்பதை நிரூபித்தாகவேண்டும் என்றெண்ணத்தில் களத்தில் இறங்குகிறார் கோட்டை கருப்பசாமி. தனக்குக் கொடுக்கப்பட்ட வாரண்ட் வழக்குகளை தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த சமயத்தில், லாக் அப் டெத் ஒன்று நடக்க, அதில் சிக்கிக் கொள்கிறார் கோட்டை கருப்பசாமி.

இதனால், கோட்டை கருப்பசாமியின் வேலைக்கு ஆபத்து ஏற்பட, அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். ஆரம்பத்தின் முதல் இரண்டு எபிசோடில் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க சற்று தடுமாறினாலும், அதன்பிறகு, அக்கதாபாத்திரத்திற்குள் தன்னை சரியாக பொருத்துக் கொண்டு, மிகவும் இயல்பாக நடித்து ஸ்கோர் செய்து விட்டார் பிரசாந்த் பாண்டியராஜ்.

இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு, அக்கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் நம் கண்களுக்கு கோட்டை கருப்பசாமியாகவே தென்படுகிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

ஒரு சாதாரண போலீஸ், அவருக்குள் இருக்கும் வலிகள் அதனை எதிர்கொள்ளும் போது ஏற்படும் இன்னல்கள், தன் திறமையை வெளிப்படுத்த இருக்கும் தடங்கல்களை எப்படி கையாண்டது என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். காவல் நிலையத்தில் சக காவலர்களை கோட்டை என்று கூற வைப்பதற்கு, அவர் செய்யும் ஒரு அதிரடியை காட்சியாக பார்க்கும் போது, புல்லரித்து விடுகிறது.

ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்த எபிசோடை பார்க்கும் ஒரு தூண்டலை கொடுத்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கடைசி இரண்டு எபிசோட்கள் பரபரப்பின் உச்சம் என்றே கூறலாம். வெப் சீரிஸ் எடுக்க வரும் இயக்க வரும் இயக்குனர்கள், வெப் சீரிஸில் நடிக்க வரும் நடிகர்கள் என அனைவருமே ஒரு கணம் “வாரண்ட்” வெப் தொடரை பார்த்து விட்டு வரலாம்.

 

எக்ஸாம் எழுதும் போது முக்கியமான சிலவற்றை கண்டிப்பாக படித்து விட்டு போவோம். அப்படியாக, வாரண்ட் என்ற தொடரை படித்து விட்டு நடிப்பு, இயக்கம், எழுத்து, திரைக்கதை என அனைத்தையும் ஒருசேர இதில் கற்றுக் கொள்ளலாம்..

மேலும், தொடரில் நடித்திருந்த அருள்தாஸ், தனது அனுபவ நடிப்பை அளவின்றி கொடுத்திருக்கிறார். அதிலும், அவர் கூறும் அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் அவரது நடிப்பிற்கான தீணி என்றே கூறலாம். மேலும், காவல்நிலையத்தில் சக காவலர்களாக நடித்த அனைவருக்குமே அவர்களது நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்த சரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாலாஜி சக்திவேலும் தனது கதாபாத்திரத்தை சரியாக நடித்து கொடுத்திருக்கிறார். மேலும், தொடரில் நடித்து மூன்று கதாநாயகிகளும் நடிப்பில் தேவதைகள் தான். அதுமட்டுமல்லாமல், திருடனாக நடித்தவர் அல்டிமேட்.

சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசையும் அசோக்குமார் அவர்களின் ஒளிப்பதிவும் இந்த தொடருக்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மிகவும் சரியான கதையை சரியான திரைக்கதைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன். பேப்பரில் என்ன எழுதினாலும், அதை சரியாக இயக்கினால் மட்டுமே, மக்களுக்கானதாக மாற்ற முடியும் என்பதில் தெளிவாக இருந்து இந்த தொடரை மிகவும் திறம்பட இயக்கியிருக்கிறார் விக்னேஷ் நடராஜன்.

தமிழ் சினிமாவிற்கு ஒரு தரமான இயக்குனர் கிடைத்துவிட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த தரமான படைப்புகள் இவரது இயக்கத்தில் வந்து கொண்டே இருக்கும். வாழ்த்துகள் விக்னேஷ் நடராஜன்.

முழு படைப்பும் உருவாக்கமும் உருவாக காரணமாக இருந்த பிரசாந்த் பாண்டியராஜ்க்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

வாரண்ட் – 20206ன் பெஸ்ட் க்ரைம் த்ரில்லர்…

Facebook Comments

Related Articles

Back to top button