Spotlightசினிமாவிமர்சனங்கள்

சித்தா – விமர்சனம் 3.5/5

SU அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சித்தா.

படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் எந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

அண்ணன் இறந்துவிட்டதால், அவரின் 7 வயது குழந்தையை வளர்த்து வருகிறார் சித்தார்த். அண்ணி, சித்தார்த், குழந்தை என சிறு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அண்ணன் மகளை தன் மகளாக நினைத்து வளர்த்து வருகிறார் சித்தார்த்.

நண்பனின் அக்கா மகளும் சித்தார்த் மகளும் ஒரு பள்ளியில் படிக்கின்றனர். நண்பனின் அக்கா மகளிடமும் சித்தார்த் பாசமாக இருக்கிறார். ஒருநாள், சித்தார்த் அருகில் செல்லும் போது அந்த சிறுமி தள்ளிச் செல்கிறாள்.

காமூகன் ஒருவன் அந்த சிறுமியிடம் அத்துமீறியதால் அந்த சிறுமி நடுங்கியிருக்க, பழியோ சித்தார்த் மீது விழுகிறது. அதே சமயத்தில், சித்தார்த்தின் மகள் கடத்தப்படுகிறாள்.

கடைசியாக கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டாளா.? காமூகன் யார் என்று கண்டுபிடித்தார்களா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சித்தார்த், தனது அனுபவ நடிப்பை கச்சிதமாக கொண்டு வந்து இப்படத்தில் சேர்த்திருக்கிறார். எந்த இடத்தில் எவ்வளவு நடிப்பு வேண்டும் என்பதை அளவு எடுத்தாற் போல் அளந்து கொடுத்திருக்கிறார் சித்தார்த். தனது மகளை காணவில்லை என்றதும் தவிக்கும் தவிப்பில் கண்களை குளமாக்கி விடுகிறார்.

நாயகியாக நிமிஷா சஜயன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சியில் ஆரம்பித்து, சித்தார்த் உடனான உரையாடல் வரைக்கும் சக்தி கேரக்டராகவே நம்முள் இருந்துவிட்டுச் செல்கிறார். அண்ணியாக அஞ்சலி நாயரும் அளவாக நடித்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரும் பலமே நடித்த நடிகர்கள் தான். சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து படத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள். வில்லன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்ற யதார்த்த சினிமாவை கச்சிதமாக இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு விழிப்புணர்வு படமாகவே இப்படத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் அருண் குமார். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிகமாக பேசவும், அவர்களிடம் செல்போனை அதிகமாக கொடுத்து அடிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் மிக தெளிவாக இப்படத்தில் கூறியிருக்கிறார்.

படத்தின் பாடல்கள் காதோரம் வருடும் பாடலாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் இரண்டாம் பாதி வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது. முதல் பாதியில் இருந்த ஒரு ஆமை வேகத்தை தடுத்திருந்திருக்கலாம்.

சித்தா – பக்கா..

Facebook Comments

Related Articles

Back to top button