
‘லப்பர் பந்து’ படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து, தனுஷுடன் முதன்முறையாக இணையும் திரைப்படம் D56. இப்படத்தின் தொடக்க விழா செப்டம்பர் 25 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றது. பூஜையில் படக்குழுவினருடன் ரசிகர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
Sithara Entertainments சார்பில் நாக வம்சி, Primark Productions சார்பில் ஹரிதா லிங்கசாமி, Srikara Studios சார்பில் சாய் சௌஜன்யா ஆகியோர் படத்தைத் தயாரிக்கின்றனர். தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, விஜய்குமார், ப்ரீத்தி முகுந்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்திற்கு D56 என்பது தற்காலிகப் பெயராக உள்ளது; அதிகாரப்பூர்வத் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பூஜை விழாவில் பேசிய வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். கதையைக் கேட்டபோது ஆச்சரியப்பட்டதாகக் கூறிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். நிகழ்வில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து, “பூஜையே மாநாடு போல இருக்கிறது” என மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் எழுத்தைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா, ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவரது திறமை வெளிப்பட்டதாகக் கூறினார். D56 படத்திற்காக மண்ணின் மணம் கொண்ட கதையை இயக்குநர் உருவாக்கியிருப்பதாகவும், வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் சாய் அபயங்கர் அடங்கிய குழுவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
விழாவில் சுருக்கமாகப் பேசிய தனுஷ், பூஜைக்கு வந்து ஆதரவும் ஆசீர்வாதமும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடா விருந்தில் அனைவரும் உணவருந்திவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.

‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் என்பதாலும், தனுஷ் – வடிவேலு மீண்டும் இணைவதாலும் D56 ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகளைப் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





