
பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டுப் போன ஸ்டன்ட் சிவா, கோலி சோடா 2 படத்தில் முழு வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார்.
தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். கோலி சோடா 2ல் ஸ்டன் சிவாவின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து ஸ்டன் சிவா கூறும்போது, “முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார்.
அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த பாராட்டுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இயக்குனர் விஜய் மில்டனுக்கும், பத்திரிக்கையாளர்கள் உட்பட என் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 240 திரையரங்குகளில் வெளியான கோலி சோடா 2, அதே அளவு திரையரங்குகளில், நல்ல வரவேற்புடன் இந்த வாரமும் தொடர்கிறது.