வாடிப்பட்டி: வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைலைப்பள்ளியில் கிராமப்புற ஏழை மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். இப்பள்ளியில் இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளியில் சேர வரும் மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சிக்குழு வளர்ச்சிநிதி என்ற பெயரில் நன்கொடை புத்தகம் அடித்து வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. ரூ.200 முதல் 1000 வரை கட்டாயமாக நன்கொடை வசூலிக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாததால் வசூல் வேட்டை தொடர்கிறது.
கடந்த சில நாட்களாக நன்கொடைக்கான ரசீதை பெற்றோரிடம் கொடுத்த வந்த பள்ளி வளர்ச்சிக்குழுவினர் தற்போது அதை பெற்றோரின் கையில் கொடுக்காமல்
விண்ணப்பப்படிவத்தோடு இணைத்து வைத்துக்கொள்கின்றனர். இது குறித்து புகாரளித்தால் தங்களது பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுமோ என பெற்றோர்கள் புகாரளிக்க தயங்குகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இலவசமாக வழங்க வேண்டிய கல்வியை பள்ளி வளர்ச்சிக்குழுவினர் மாணவிகளின் பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மாணவிகள் மட்டுமே பயிலும் இப்பள்ளியில் கட்டாய நன்கொடையால் பாதிக்கப்படுவதைத் தடுக்க கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.