
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 3’ திரைப்படம் உருவாக வாய்ப்புள்ளதாக பிரபல திரையரங்க உரிமையாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றி காரணமாக அதன் அடுத்த பாகத்தை உருவாக்கும் எண்ணத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும், அதற்கான ஆரம்பகட்ட கதைக்கரு ஏற்கெனவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகவுள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்துப் பேசிய அவர், இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து சிறந்த இயக்குநர் என்றும், ரஜினிகாந்துடன் அவர் முதல்முறையாக இணையும் திரைப்படம் நிச்சயம் சிறப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ‘தர்மன்’ திரைப்படத்தை ‘ஜெயிலர்’ படத்துடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘படையப்பா’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகியவை முக்கியமான மைல்கல் திரைப்படங்கள் எனத் தெரிவித்துள்ள திருப்பூர் சுப்பிரமணியம், ‘தர்மன்’ திரைப்படம் அஸ்வத் மாரிமுத்துவின் தனித்துவமான இயக்கப் பாணியில் உருவாகி, திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் ‘ஜெயிலர் 3’ குறித்த எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.




