
நடிகர் கே. மணிகண்டன் முதன்முறையாக முழுநீள ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘பைசன் காளமாடன்’ படத்தைத் தொடர்ந்து இந்த இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்துள்ளன.
கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்த்து போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதையும், அந்தப் போராட்டம் அவரை மக்களின் தலைவராக மாற்றுவதையும் மையமாகக் கொண்டு ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது.
கே. மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். டான் அசோக் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியாகும் ‘மக்கள் காவலன்’, அவரது முதல் ஆக்ஷன் கதாநாயகன் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





