
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் தெலுங்கு நடிகர் சத்யா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கோல்டன் பாக்கியம்’ (Golden Bhagyam) என பெயரிடப்பட்டுள்ளது. ‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு நிறுவனங்கள் சார்பில் நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளையும், இரு திரையுலகைச் சேர்ந்த நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘Telumil’ (Telugu + Tamil) படைப்பாக ‘கோல்டன் பாக்கியம்’ உருவாகிறது. வெளியான கிளிம்ப்ஸில் தெலுங்கு – தமிழ் உணவு கலாசாரத்தை நகைச்சுவையாக அறிமுகப்படுத்தி, பின்னர் யோகி பாபு மற்றும் சத்யாவின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
காதல், க்ரைம், ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து முழுநீள என்டர்டெய்னராக படம் உருவாகிறது. குறிப்பாக தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதும், யோகி பாபு தெலுங்கு பேசுவதும் படத்தின் சுவாரஸ்யமான அம்சமாக அமைந்துள்ளது.
ஜெயஸ்ரீ, அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
பப்லு அஜு ஒளிப்பதிவு செய்ய, பவன் CH மற்றும் நிதிஷ் ஜான் இசையமைக்கின்றனர். ரவிதேஜா கிரிஜாலா படத்தொகுப்பையும், சிவா காமேஷ் D தயாரிப்பு வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். ‘கோல்டன் பாக்கியம்’ திரைப்படம் இந்த ஆண்டுக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.





