பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இன்று காலா திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. நேற்றிரவு வெளிநாடுகளில் முதல் காட்சி வெளியிடப்பட்டது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்டைல் கிங் ரஜினிகாந்த்தும், வளரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. இந்த காம்போ மீண்டும் படத்தை வெற்றி படமாக்கியதா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
தாராவி, மும்பை மாநகரத்தின் மிகப்பெரிய குடிசை வாழ் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. சிறுவயதிலேயே திருநெல்வேலியில் இருந்து தாராவிக்கு இடம்பெயருகின்றனர் வேங்கையனும் அவரது மகன் காலாவும். அங்குள்ள மக்களின் உரிமைக்காக லோக்கல் ரவுடி ஹரி தாதாவை எதிர்க்கின்றனர். இதில் வேங்கையன் கொல்லப்படுகிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு மும்பை மாநகரின் அசைக்க முடியாத கட்சித் தலைவராக வளர்ந்து நிற்கிறார் ஹரி தாதா.
காலா, செல்வியை திருமணம் செய்து கொண்டு தனது மகன், பேரக்குழந்தைகளுடன் அங்கு நிம்மதியான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். தாராவி முழுவதையும் தன்னுடையதாக்க முயல்கிறார் ஹரி தாதா. தன் மக்களுக்காக ரஜினி , ஹரியை எதிர்த்து போராடும் அதகளமே இந்த ‘காலா’.
ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் முயன்றுள்ளார். ஆனாலும், எல்லா ரஜினி படங்களை போலவே, இதிலும் ரஜினி மட்டுமே முன்னணியில் நிற்பதால் அவரை ரசிக்க ரசிகர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
டெக்னிக்கலாக காலா சிறப்பாக உள்ளது. முதலுக்கு மோசமில்லாத திரைக்கதை. ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள், கண்கவரும் நடன அமைப்புகள் உள்ளன. பெரும்பாலும் குடிசை பகுதிகள் பின்னணி கொண்ட கதை அமைப்பில், கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.படத்திற்கு தேவையான எடிட்டிங்கை ஷார்ப்பாக செதுக்கியுள்ளனர்.
நானே பட்கர் நடிப்பும் பாராட்டும் விதத்தில் உள்ளது. பாட்ஷா படத்தில் வில்லன் ரகுவரனுக்குப் பிறகு ரஜினிகாந்திற்கு சரியான ஒரு வில்லனாக நானே பட்கர் நடித்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காலா – கரிகாலனின் அதகள வேட்டை…