Spotlightசினிமாவிமர்சனங்கள்

கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம் 3/5

லிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், பத்மன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கழுவேத்தி மூர்க்கன்.

கதைப்படி,

இராமநாடு மாவட்டம் தான் கதைக்களம்…

இரு வேறு சாதி பிரிவினர் ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். இதில், மேல் சாதி மற்றும் கீழ் சாதி என்ற பாகுபாடு இருக்கிறது. அது எந்த சாதி என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே வைக்கப்பட்ட நடிகர்களின் புகைப்படம் காட்டிவிடுகிறது.

இதில், ஒரு பிரிவை சேர்ந்தவர் தான் அருள்நிதி. இவரது தந்தை ஊரில் மதிப்புமிக்கவர். அருள்நிதியின் நெருங்கிய நண்பனாக வருபவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். இவர் வேறொரு பிரிவு சாதியை சேர்ந்தவர்.

சந்தோஷ் மீது யாராவது கைவத்தால், அது தான் சொந்த சாதிக்காரனாக இருந்தாலும், அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு சந்தோஷ் மீது அளவு கடந்த நட்பாக பழகி வருகிறார் அருள்நிதி.

தனது சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் சந்தோஷ்.

இந்த சூழலில், அந்த ஊரில் தன்னுடைய சாதி அரசியல் பலத்தை காண்பிக்க திட்டம் தீட்டுகிறார் வில்லனாக வரும் ராஜசிம்மன்.

அப்போது ஏற்படும் பிரச்சனையில், ராஜசிம்மனின் பகைக்கு உள்ளாகிறார் சந்தோஷ். இந்த சூழலால் ராஜசிம்மனின் கட்சி பதவியும் பறிக்கப்படுகிறது..

இதனால், கோபமடையும் ராஜசிம்மன், சதித் திட்டம் தீட்டுகிறார். ஒரு கட்டத்தில் சந்தோஷ் கொல்லப்படுகிறார். இதன் பழியானது அருள்நிதி மீது வந்து விழுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனான அருள்நிதி எப்போதும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தமிழ் சினிமாவில் இவரின் கதையை நம்பி தைரியமாக படத்திற்கு போகலாம் என்ற நம்பிக்கையை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார்.

ஆறடி உயரத்தில் முறுக்கு மீசையை வைத்துக் கொண்டு விரிந்த கண்களோடு ஆக்ரோஷமான பார்வையோடும் நடைபோட்டு வரும் காட்சிகளில் மிரட்டுகிறார் அருள்நிதி.

அதிலும், சண்டைக் காட்சிகளில் அதிரடியைக் கொடுத்திருக்கிறார். எப்படிப்பா இப்படியெல்லாம் சண்டை போடுறீங்க என்று கேட்கும் அளவிற்கு சண்டைக் காட்சிகளை ஆக்ரோஷமாக கொடுத்திருக்கிறார் அருள்நிதி.

பால் வடியும் முகமாய், மெருதுவான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சந்தோஷ். படத்தின் முக்கிய பில்லராக வந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் சந்தோஷ். ”இந்த புள்ளைய கொல்றதுக்கு எப்படிடா மனசு வந்துச்சு” என்று கேட்கும் அளவிற்கு அப்பாவித்தனமான முக பாவனையோடு தனது நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் நம்மை துளிர் விட வைத்தவர் நடிகை துஷாரா விஜயன். கண்களால் ரசிகர்களை கவரும் நடிகைகளில் இவரும் முக்கியமானவர் தான். அருள்நிதிக்கும் துஷாராவிற்குமான காதல் காட்சிகள் நம்மை பரவசப்படுத்துகின்றன.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதை வலுவானதாக தனது நடிப்பில் மாற்றிய சாயாதேவிக்கு வாழ்த்துகள்.

மெயின் வில்லனாக நடித்து ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார் ராஜசிம்மன். மிரள வைக்கும் கண்களைக் கொண்டு அதிரடி காட்டியிருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து, தனது கேரக்டரை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் பத்மன். படத்தின் ஓட்டத்தில் முக்கியமான கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் பத்மன்.

வழக்கமான இராமநாடு கதைக்களத்தைக் கொண்ட சாதி அரசியல் என்று பொத்தம் பொதுவாக இந்த படத்தை கடந்து சென்றுவிட முடியாது. சாதி அரசியலின் அடிமட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை களம் கண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம ராஜ்.

நடிகர்களின் போர்டுகளை வைத்தே, இது எந்த சாதிகளுக்கான மோதல் என்று காட்டும் இடத்தில் இயக்குனருக்கு அப்ளாஷ். பல இடங்களில் சாட்டை சுழற்றும் அளவிற்கு தனது வசனங்களை வீசியிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதியில் காதல் காட்சி, சண்டை காட்சி என ஒரு பக்கமாகவே கதை நகர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில், இடைவேளைக்குப் பிறகு கதையின் மையக்கருவை நோக்கி பயணித்தது.

முதல் பாதியில் சற்று கவனம் செலுத்தியிருந்தால், கதை இன்னும் ஓட்டம் பிடிக்க கைகொடுத்திருக்கும்.

அண்ணாத்த படத்தின் இசை ஆங்காங்கே எட்டிப்பார்த்தது “இமான் சார் என்ன ஆச்சு உங்களுக்கு” என்று தான் கேட்க தோன்றியது. எப்போதும் தனித்துவமான இசையை கொடுத்து அதில் பெயர் பெற்ற இமானின் இசையா இது என்று தலையில் கைவைக்கும் அளவிற்கு சோதனை கொடுத்துவிட்டார் இமான்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றே கூறலாம் இவரை… அவர் தான் ஒளிப்பதிவாளர். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி நிற்கும் தூணாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் படம் பார்க்கும் கண்களை விரிய வைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கெடல் நன்றாகவே தெரிந்தது.

படத்தில் அருள்நிதிக்கும் சந்தோஷுக்குமான நட்பு அளப்பறியது. நட்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லும்படியாக கதையை நகர்த்தியிருப்பது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும் பெறும்.

அந்த காலத்தில் கழுவேத்தி மரம் என்ற ஒன்று புழக்கத்தில் இருந்திருக்கிறது. மிகவும் கொடூரமான தண்டனைக் கொடுக்கும் மரமாக அது இருந்து வந்துள்ளது.

ஏற்றுக் கொள்ள முடியாத தவறை செய்பவனுக்கு அந்த மரத்தில் தான் தண்டனை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அந்த மரத்தினை வழிபடும் போக்கு ஆங்காங்கே கிராமங்களில் இன்னமும் இருந்து வருகிறது. படத்தின் இந்த கிராமத்திலும் அதன் போக்கு இருக்கிறது.

இந்த மரத்தினை சுற்றியே மொத்த கதையும் நகரும்படியாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்.

எந்த இடத்திலும் சுயசாதி பெருமை பேசாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பது இயக்குனரின் தனி முத்திரை.

இறுதியாக சாதி என்றும் ஒழியாது என்று கூறும்படியான காட்சி வைத்து முடித்திருப்பது அப்ளாஷ்.

கழுவேத்தி மூர்க்கன் – நட்பு..

Facebook Comments

Related Articles

Back to top button