
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
“குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகிய படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்த பரிசு. பலரும் கூறியதுபோல, சீனு ராமசாமி சாரின் திரைப்படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும், அவை நல்ல வரவேற்பை பெறும்” என்கிறார் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் வடிவுக்கரசி, ஷாஜி சென், வசுந்தரா காஷ்யப் மற்றும் வெற்றிக்குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா, சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்களின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த படத்தின் இசை இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




