
நாயகன் சுரேஷ் ரவி உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நாயகி ரவீனா தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். பெற்றோரை எதிர்த்து திருமணமான புதுமண தம்பதிகள் இருவரும்.
ரவீனா பணிமுடிந்து வீட்டிற்கு வரும்போது, வழிப்பறி கொள்ளையர்களிடம் தனது நகைகளை பறிகொடுத்து விடுகிறார்.
தனது கணவரிடம் இதைக் கூறி, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று, திரும்பிய போது, வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீஸிடம் சிக்கி விடுகிறார்கள் இருவரும்.
மன அழுத்தத்தில் இருந்த நாயகன் சுரேஷ் ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மைம் கோபியிடம் கோபமாக வார்த்தையை விடுகிறார்….
மைம் கோபியை டென்ஷன் ஆக்கிய நாயகன் சுரேஷ் கோபியை காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர்..
அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் மீதிக் கதை…
நாயகன் சுரேஷ் ரவிக்கு அறிமுகம் இப்படம் என்றாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜே’வாக அனைவரும் பார்த்திருக்கலாம்.
சிறந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒரு சில இடங்களில் ரியாக்ஷன் இல்லாமல் இருந்தது சற்று சோர்வடைய வைத்தது. இன்னும் சற்று முயற்சி செய்தால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகனாக வலம் வருவார் சுரேஷ் ரவி.
நாயகி ரவீனாவி அளவெடுத்து நடித்து கைதட்டல் பெறுகிறார். சோகம், காதல், மகிழ்ச்சி என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
படத்தில் கதையின் நாயகனாக ’மைம் கோபி’யை தான் கூற இயலும்.
ஆம், இப்படத்தை பார்த்து ‘மைம் கோபி’யை நீங்கள் திட்டினால், படத்தின் நாயகன் அவர் தான். மிரட்டலான பார்வை, மிரட்டலான உடற்மொழி, கம்பீரமான குரல் என அனைத்தையும் சேர்த்து ஒரு சேர உருவாக்கப்பட்டது தான் மைம் கோபி கதாபாத்திரம்.
’இந்த மாதிரியான ஒரு போலீஸ நாம பார்த்திடவே கூடாதுடா சாமி’ என அனைவரும் கதறும் அளவிற்கு தேர்ந்தெடுத்த அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் மைம் கோபி.
ஏனைய கதாபாத்திரங்களாக நடித்த அனைவரும் கதையோடு பயணித்துள்ளார்கள்.
முதல் காட்சியில் இருந்து இறுதி வரை மக்களை போலீஸ் நசுக்குவது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, திருடர்களுடன் போலீஸ் வைத்திருந்த டீல்
நாடு முழுவதும் கடமையை தன் உயிராக செய்து கொண்டிருக்கும் காவலர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களையும் சற்று காண்பிருத்திருக்கலாம். சூப்பர் குட் சுப்ரமணி நேர்மையான போலீஸாக சற்று ஆறுதல்.
மற்றபடி, போலீஸை எப்போதுமே பகைத்துவிடக் கூடாது என்பதற்கான நோக்கமே படம் முழுக்க காட்டப்பட்டுள்ளது.
படம் எடுக்கப்பட்ட விதம், பாராட்டுக்குறிய ஒன்று. கதாபாத்திரத்திற்கு நேர்த்தியாக உயிரோட்டம் கொடுத்த இயக்குனர் ‘ஆர் டி எம்’க்கு வாழ்த்துகள்.
கே எஸ் விஷ்ணுஸ்ரீ’யின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி அருமை. பின்னனி இசை இன்னும் சற்று படபடப்பை கொடுத்திருக்கலாம்.
இளம் படைப்பாளிகளுக்கு தோளோடு தோள் நின்ற இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் & BOFTA தனஞ்செயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
காவல் துறை உங்கள் நண்பன் – நண்பனாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான் எல்லோருக்கும். ஆனால்..??
‘கண்ணபிரான் திருந்த வேண்டும். நண்பனாக மாற வேண்டும்.”
யார் இந்த கண்ணபிரான்…?
திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.