
கேரளாவில் கொச்சி, மாராடு அருகே 4 அப்பார்ட்மெண்ட்களுடன் கூடிய சுமார் 350 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழும்பியது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை வரும் 20-ஆம் தேதிக்குள் அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.
இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், குடியிருப்பு வாசிகளுக்கு அனைத்து விதமான பாதுகாப்பும் வழங்கப்பட்டு, அரசு எடுத்து வைக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் உடன்படுகிறோம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.