Spotlightசினிமாவிமர்சனங்கள்

கொன்றால் பாவம் – விமர்சனம் 3.5/5

யக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கொன்றால் பாவம். கன்னடம், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இக்கதை தமிழில் கொன்றால் பாவம் என்ற டைட்டிலோடு அதே இயக்குனர் இப்படத்தையும் இயக்கி வரும் வெள்ளி (10/03/23) அன்று திரை விருந்தாக வரவிருக்கிறது..

கதைப்படி,

1980 களில் நடக்கும்படியாக கதை ஆரம்பிக்கிறது. அழகிய கிராமத்தில் கணவன் மனைவியாக வரும் சார்லி மற்றும் ஈஸ்வரி ராவிற்கு வரலட்சுமி மகளாக வருகிறார். தங்களுக்கு இருக்கும் குடும்ப வறுமையின் காரணமாக மகள் வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்து வருகின்றனர் சார்லியும் ஈஸ்வரி ராவும்.

இச்சமயத்தில், வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப், ஒருநாள் சார்லியின் வீட்டில் தங்கி விட்டுச் செல்வதாக கேட்க, சார்லின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

அப்போது, சந்தோஷ் பிரதாப்பிடம் நிறைய பணம் மற்றும் நகை இருப்பதை பார்த்த வரலட்சுமி அவரை கொன்று பணம், நகைகளை பறிக்க நினைக்கிறார்.

அந்த ஒருநாள் இரவுக்குள் வரலட்சுமி நினைத்தது நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

மல்லிகா கதாபாத்திரமாகவே மாறி தனது கேரக்டரை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் நாயகி வரலட்சுமி சரத்குமார். அவரது கண்களும், படபடவென பேசும் அந்த வேகப் பேச்சும் படத்தின் கதாபாத்திரத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

தனது ஆசையை கண்கள் வழியாக கூறும் போதாக இருக்கட்டும், அதை அடைய அதே கண்களால் வெறி பிடித்தவராக மாறும் போதாக இருக்கட்டும் என தனக்கான கேரக்டரை உள்வாங்கி நடித்து ஜொலித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். நாளுக்கு நாள் நடிப்பின் சிகரமாய் உயர்ந்து கொண்டே இருக்கிறார் வரலட்சுமி.

தம்பதிகளாக சார்லி மற்றும் ஈஸ்வரி ராவ்’ன் நடிப்பு அபாரம். தனது அனுபவ நடிப்பால் இருவரும் வியக்க வைக்கிறார்கள். அதிலும், ஈஸ்வரி ராவ்’ன் நடிப்பு மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

படபடப்பு, பயம், பதட்டம் என ஒரு முழுத் தேர்ச்சி பெற்ற நடிகையாக ஜொலித்திருக்கிறார்.

அழகான இளவரசன் போல் வருகிறார் சந்தோஷ் பிரதாப். காட்சிக்கு காட்சி நடிப்பிலும் அக்கதாபாத்திரத்திற்கு தேவையான அழகும் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார். கைதட்டும் அளவிற்கு அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சென்றாயன்.

படத்தின் மிகப்பெரும் பலமே கதாபாத்திரங்களின் தேர்வுதான். ஒவ்வொரு கேரக்டர்களும் அக்கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக பொருந்தியிருப்பது அழகு.

அந்த ஒரு இரவில் நடக்கும் பாசம், கோபம், பதட்டம், பாவம், படபடப்பு என ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியில் காட்ட வேண்டிய அனைத்து விதமான நடிப்பையும் இந்த ஒரு படத்திற்குள் அடக்கிக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தான். இரண்டாம் பாதிமுழுவதும் இரவுக்குள் நடக்கிறது என்பதால், அடுப்பில் எரியும் நெருப்பை மட்டும் கொண்டு காட்சிகள் ஒவ்வொன்றையும் பிரம்மிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் செழியனின் மூன்றாம் பார்வை வியக்க வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சி எஸ்’ன் விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு பின்னணி இசையில் மிகப்பெரும் கைதட்டல் வாங்கிய படம் என்றால் அது “கொன்றால் பாவம்” படமாகத் தான் இருக்கக் கூடும்.

கதையின் மையக்கருவை உள்வாங்கி கதைக்கேற்ற பின்னணி இசையில் கதை நகர்ந்து செல்வது நம்மையும் அக்கதையோடு பயணப்பட வைத்திருக்கிறது.

காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் நிச்சயம் ஆச்சர்யப்பட வைக்கும். க்ளைமாக்ஸ் காட்சி அனைவரின் கண்களிலும் ஈரத்தை வரவைத்து விடுகிறார் இயக்குனர்.

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு தூணாக நிற்கிறது. பேராசை வந்து விட்டால் ஒரு மனிதன் எந்த எல்லைக்கும் போய்விடுவான்… அதே பேராசை அவனுக்கு பேராபத்தாய் முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த “கொன்றால் பாவம்”.

எடிட்டிங் – ஷார்ப்..

அளவான நேரம் கொண்டு
அழகான காட்சியமைப்போடு
அறிவான கதைகளத்தோடு
அலம்பல் இல்லா நடிப்போடு
அகம் மகிழும் இசையோடு
அதகளமான திருப்புமுனையோடு
அறிவார்ந்த ஒளிப்பதிவோடு
அதிகமாக வியக்க வைத்ததோடு

ஆழ்ந்த ஆச்சர்யத்தைக் கொடுத்த “கொன்றால் பாவம்” பாராட்டத்தக்கது…  

Facebook Comments

Related Articles

Back to top button