
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு வித்தியாசமான கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் “டபுள் ஆக்குபன்ஸி”. ஃபேண்டஸி, காதல், சயின்ஸ்-பிக்ஷன் மற்றும் எமோஷன் ஆகிய அனைத்தையும் கலந்த ஒரு புதுமையான முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
கதை
நீண்ட வருடங்களாக குழந்தைக்காக காத்திருந்த தம்பதிகளான போஸ் வெங்கட் – வினோதினி வைத்தியநாதன் தம்பதிகளுக்கு இறுதியாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை சாதாரண குழந்தை அல்ல.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அபூர்வ சக்தியுடன் பிறக்கிறது அந்த குழந்தை.
பெண் வடிவத்தில் ரேஷ்மாவாகவும், ஆண் வடிவத்தில் சந்தோஷாகவும் வாழும் இந்த இரு வாழ்க்கைகள், ஒருவருக்கொருவர் தெரியாமல் வளர்கின்றன. பெற்றோரின் மரணத்திற்கு பிறகு சென்னை வரும் ரேஷ்மா ஒரு ஜெனடிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அதே சமயம் இரவு நேரங்களில் தோன்றும் சந்தோஷ் ஒரு பப்பில் பணியாற்றுகிறார்.

ஒருபுறம் ரேஷ்மாவுக்கு வினோத் கிஷன் மீது காதல் மலர, மறுபுறம் சந்தோஷ் சம்யுக்தா விஸ்வநாதனுடன் காதலில் விழுகிறார்.
இந்த இரட்டை வாழ்க்கை ரகசியம் ஒரு ஜெனடிக் நிறுவனத்தின் கண்ணில் படும்போது, அதன் பின்னால் இருக்கும் ஆபத்தான திட்டங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன.
இறுதியில் காதல் வென்றதா? அறிவியல் ஆராய்ச்சியின் பெயரில் நடக்கும் சதிகளை அவர்கள் முறியடித்தார்களா? என்பது மீதிக்கதை.
ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் ஒரே மனிதரின் இரு பரிமாணங்களை திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்கள். குறிப்பாக உணர்ச்சி காட்சிகளிலும் குழப்பமான மனநிலையையும் வெளிப்படுத்தும் தருணங்களிலும் இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கலகலப்புக்கும் பஞ்சம் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் நடித்து வெளிப்படுத்தியிருக்கின்றனர் சந்தோஷும் ரேஷ்மாவும்.. சந்தோஷ், இளமையான துடிப்புடனும் ஆக்ஷன் காட்சியில் அதிரடியாகவும் செண்டிமெண்டில் ஏங்க வைக்கவும் என பல கோணங்களில் தனது நடிப்பின் திறனை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இடத்தை சந்தோஷ் பிடிப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவிற்கு தேவையானதை கற்றுத் தேர்ந்திருக்கிறார் சந்தோஷ்…

சில படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய ரேஷ்மா, இப்படத்திலும் அதனை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். சிறு சிறு குறும்புத்தனத்தால், படம் பார்க்கும் ரசிகர்களை நன்றாகவே மகிழ்வித்திருக்கிறார் ரேஷ்மா.
வினோத் கிஷனின் வில்லத்தனமான முகம் இந்த படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ரொமாண்டிக் லுக்கில் இளம் பெண்களை தன்வசப்படுத்தியிருக்கிறார் கிஷன். கதைக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் கிஷன். அழகாலும் கவர்ச்சியாலும் நடிப்பாலும் ரசிகர்களை தன்வசப்படுத்திவிட்டார் சம்யுக்தா விஸ்வநாதன். என்ன புள்ள இம்புட்டு அழகா இருக்கன்னு அடிக்கடி கேட்க வைத்துவிட்டார் சம்யுக்தா.
பகவதி பெருமாள் (பக்ஸ்) திரையில் தோன்றும் தருணங்களில் கதைக்கு தேவையான வில்லத்தனத்தை கொடுத்திருக்கிறார். விடிவி கணேஷனின் காமெடி பல இடங்களில் சிரிப்பலையை கொண்டு வந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். குறிப்பாக காதல் மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகளில் அவரது பின்னணி இசை கதையின் தாக்கத்தை உயர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி, கமர்ஷியல் படத்திற்கு தேவையான வெளிச்சத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் காட்சிகளை வேகமாக நகர்த்தியிருக்கிறார். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகம் பெறுகிறது.
இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, மிகவும் துணிச்சலான மற்றும் புதுமையான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
ஒரே உடலில் இரு வாழ்க்கைகள், இரு காதல்கள், இரு அடையாளங்கள் என்ற சிக்கலான கருத்தை ரசிகர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், இந்த படம் நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும், மகிழ்ச்சியாக உணர வைக்கும்..
ஜாலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், செண்டிமெண்டாக அன்பையும் கடத்திவிட்டுச் சென்று விட்டார் இயக்குனர்.
பலம்:
புதுமையான கதைக்களம்
ரேஷ்மா – சந்தோஷின் நடிப்பு
சாம் சி.எஸ் பின்னணி இசை
திரைக்கதை
இரண்டாம் பாதியின் சுவாரஸ்யமான திருப்பங்கள்
“டபுள் ஆக்குபன்ஸி” ஒரு வழக்கமான காதல் படமாக இல்லாமல், வித்தியாசமான கருத்து, சுவாரஸ்யமான திரைக்கதை என பல அம்சங்களுடன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் திரைப்படம்.





