
கெவின் ஜோசப் இயக்கத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான்விஜய், மதுமிதா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கும்பாரி.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரசாத் ஆறுமுகம். இசையமைத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜெய்தன். தயாரித்திருக்கிறார் குமாரதாஸ்.
விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். கன்னியாகுமரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் நட்புக்கு மற்றொரு பெயராக கும்பாரி என்று அழைப்பார்களாம்.
விஜய் விஷ்வாவிற்கும் நாயகியாக வரும் மஹானாவிற்கும் காதல் ஏற்பட, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இவர்களின் திருமணத்திற்கு மஹானாவின் சகோதரனாக வரும் ஜான் விஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
விஜய் விஷ்வாவின் திருமணத்தை பெரிய அளவில் நடத்திகாட்டுவேன் என்று சபதமெடுக்கிறார் நலீப்.
விஜய் விஷ்வாவின் திருமணம் நடைபெற்றதா.? ஜான் விஜய்யின் திட்டம் பழித்ததா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஜய் விஷ்வா தனக்கு கொடுக்கப்பட்டதை அளவாகவும், அழகாகவும் செய்து முடித்திருக்கிறார். நடனம், காதல், ஆக்ஷன் என ஹீரொவாக எதையெல்லாம் பக்காவாக செய்யமுடியுமோ அதை சரியாக செய்து முடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட இப்படத்தில் சற்று நன்றாகவே நடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
நண்பனாக நலீப் செயற்கைத் தனமான நடிப்பாக தென்பட்டது. நாயகி மஹானா அழகாக வந்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஜான் விஜய் தனதுஓவர் ஆக்டிங்கை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சாம்ஸின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கின்றன.
நட்பை மையப்படுத்தி தான் கதை நகர்கிறது. அப்படியென்றால், அதற்கான வலிமையை இன்னும் அதிகமாகவே கொடுத்திருந்திருக்கலாம். திரைக்கதையில் சற்று உயிரோட்டத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கலாம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் கொடுத்திருக்கிறது.
கும்பாரி – பலம் பொருந்தியிருக்கலாம்…




