தயாரிப்பாளர் கார்த்திகேயன் தயாரிப்பில் அகஸ்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த குண்டான் சட்டி.
12 வயது பள்ளி மாணவி தான் இந்த அகஸ்தி.
முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை எண்டர்டெயின்மெண்ட் செய்யக் கூடிய வகையில் படம் தயாராகியுள்ளது.
கதைப்படி,
கும்பகோணம் அருகே ஒரு அழகிய விவசாய கிராமம் உள்ளது. அங்கு குப்பன், சுப்பன் என்ற இருவர் நெருங்கிய நண்பர்கள். எப்போதுமே ஒன்றாகவே இருந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
ஒரே சமயத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்கள். குப்பன், சுப்பன் இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறக்கிறது. இருவருக்குமே ஆண் குழந்தை தான். ஆனால், சுப்பனுக்கு தலையில் பானை வடிவிலான ஒரு குழந்தை பிறக்கிறது.
குப்பன், சுப்பன் இருவரின் குழந்தைகளுமே நல்லதொரு நண்பர்களாக இருக்கின்றனர். குண்டேஸ்வர, சட்டீஸ்வரன் என்ற பெயர் கொண்ட இருவரும் நல்ல சுட்டிகுழந்தைகளாக வளர்கின்றனர்.
இருவரும் தங்களது திறமைகளை வைத்து, கோவிலுக்கு கிடைக்க வேண்டிய பொருளுதவி, ஆசிரமத்திற்கு கிடைக்க வேண்டிய உணவு பொருள், விவசாயிக்கு கிடைக்க வேண்டிய உதவி என பல உதவிகளை செய்து வருகின்றனர் இருவரும். அதே சமயத்தில் இருவரின் சேட்டைகளும் அதிகமாக இருவரையும் மூங்கில் கம்பில் கட்டி வைத்து ஆற்றோடு அனுப்பி வைத்து விடுகின்றனர் குப்பனும் சுப்பனும்.
தங்களை ஆற்றோடு அனுப்பி வைத்தாலும் பல சேட்டைகளை அப்போதும் செய்கின்றனர். அப்படி என்ன செய்தார்கள் என்பதை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கின்றனர்.
குழந்தைகள் பார்க்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் அகஸ்தி. அனிமேஷனை அவ்வளவு கச்சிதமாக தெளிவாக காண்பித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எதை செய்யக் கூடாது என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார் அகஸ்தி.
கதை நகரக்கூடிய கதைகளம், அணில் செய்த உதவி என சின்ன சின்ன விஷயத்தையும் அவ்வளவு மெனக்கெடல் செய்து படத்தை இயக்கியிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் பெயர்களையும் எளிதில் மனதில் பதியும்படியாக கூறியிருக்கிறார்கள். அமர் கீத் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மற்றொரு பலம்.
ஆற்றில் சென்ற இருவரையும் காப்பாற்றிய விவசாயின் தோட்டத்தை காலி செய்தது, துணி துவைப்பவர்களின் துணிகளை எடுத்துச் செல்வது, நெல் விவசாயியின் வைக்கோல்போரை காலி செய்வது, துணி காய்க்கும் மரம் என்று ஏமாற்றுவது, பேராசை கிராமத்தில் கழுதையை வைத்து ஏமாற்றுவது என குழந்தைகளுக்கான காமெடி காட்சிகளை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் பெருந்தன்மை, வளர்ப்பு இரண்டும் படத்தில் பெரும் பலமாக இருக்கிறது.
குண்டான்சட்டி – குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்.