Spotlightசினிமா

ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது.

சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர் செளந்திரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பரத நாட்டிய கலைஞர் பினேஷ் மஹாதேவன் குழுவினர் நடத்திய ‘ருத்ர தசாகம்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தது போல இருந்தது என்றால் அது மிகையாகாது.

அதனைத் தொடர்ந்து பேசிய தனஞ்செயன், “திறமையான கலைஞர்கள் பணம் கொடுத்தால் தான் சபாக்களில் நாட்டியமாட முடியும் என்கிற நிலை மாறி கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஆட வைக்கவேண்டும். நல்ல கலைஞர்களை ஊக்குவித்தால், அவர்களால் அற்புதமான நாட்டிய விருந்து படைக்க முடியும். அப்படி, நல்ல கலைகள் அரங்கேற்றப்பட்டால், ரசிகர்களும் அதனை அங்கீகரிப்பார்கள்.

அந்த வகையில், திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து முற்றிலும் சிறப்பான மேடையமைத்துக் கொடுக்கும் ரவீந்தர் சேகரரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ நிறுவனம் பாராட்டுக்குரியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியத்திற்கான அரங்குகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைப்போன்ற அரங்குகளை நாம் அமைக்கவேண்டும். உலகின் துயர்களைத் தீர்க்கும் நாடு என்கிற பொருள் படவே பாரதம் என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் அதன் கலையும் ( பாரத நாட்டியம் ) ஒரே மாதிரி அழைக்கப்படுவது நம் நாட்டில் மட்டும் தான்..” என்றார்.

“தமிழை மறந்ததே கலைகளும் அழிய காரணம் ” என நடிகர் செளந்திரராஜா பேசினார்.

“கலைகளை இலவசமாகக் கொடுத்து விடாமல், ஒரு ரூபாயாவது ரசிகர்களிடம் வசூலிக்க வேண்டும்…” என கேபிள் சங்கர் பேசினார்.

“பரத நாட்டியம், நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது. அதன் மூலம் மகிழ்வும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. கலாம் ஐயாவுடன் ரஷ்யா , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற போது, அங்குள்ள கலைகளை அந்த நாட்டு மக்கள் தினமும் பார்த்து ரசித்து கொண்டாடுகிறார்கள். அதுபோன்ற நிலை, நம் நாட்டிலும் ஏற்படவேண்டும்..” என்றார் பொன்ராஜ்.

லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பேசிய போது, “திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்கவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் எந்த பண பலனும் கிடைக்கவேண்டாம். ஆத்ம திருப்தியும் நம் பாரம்பரிய கலைஞகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவுமே முக்கியம்…

வருடந்தோறும் என்றில்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவோம். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், பரத நாட்டியத்தைத் தீவிரமாக நேசிக்கும், நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறமையுள்ள கலைஞர்களுக்கு லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்றுமே துணை நிற்கும்.

ரசிகர்களை கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். கலைஞர்களை ஊக்குவியுங்கள்…” என்றார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button