Spotlightசினிமா

வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி! ‘லவ் 3.ஓ’ விழாவில் கண்ணீர் மல்க பேசிய இயக்குநர் ஆர்னிகா!

முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களை வைத்து உருவாகியுள்ள ‘லவ் 3.ஓ’ (Love 3.O) திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ள இப்படத்தை, இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ எனப் பிரபலமான ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.

இப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலங்களான கோயம்புத்தூர் மாப்ள, கே.என். ஸ்மைலி கார்த்திகேயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.

90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், AI பெண்ணை காதலிக்கும் இளைஞனின் கதையும் இடம்பெற்றுள்ளது. காதலில் ஏற்படும் பிரச்சினைகளுக்குச் சிவபெருமான் வழங்கும் தீர்வை சுவாரஸ்யமாகச் சொல்லும் வகையில் படம் உருவாகியுள்ளது.

விழாவில் பேசிய இயக்குநர் ஆர்னிகா, “ஏழு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆடிசன்களில் கலந்துகொண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அன்று வாய்ப்பு கொடுக்காதவர்களால்தான் இன்று கதாசிரியர், நடிகை, இயக்குநர் எனப் பல பரிமாணங்களில் வளர்ந்திருக்கிறேன். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

மேலும், “நமக்குத் தேவையான வாய்ப்பை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். என்னைப் போன்ற திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கிடைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

Facebook Comments

Related Articles

Back to top button