
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா & சிம்பு நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மஹா”. மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு நடித்திருக்கும் படம் என்பதால், படத்திற்கு சற்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை மஹா எதுவரை நிவர்த்தி செய்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
காதலர்களான சிம்புவும் ஹன்சிகாவும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். ஹன்சிகா கர்ப்பமாகிறார்.
இந்நிலையில், பைலட்’டான சிம்பு விமானத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானதால் இறந்துவிடுகிறார்.
அதன்பிறகு, பிறந்த குழந்தையை அதீத பாசம் காட்டி வளர்த்து வருகிறார் ஹன்சிகா.
ஊரில் ஆங்காங்கே சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியலுக்கு உட்படுத்துப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்கிறான் சைக்கோ கொலைகாரன் ஒருவன்.
அவனை பிடிக்க போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த் களமிறங்குகிறார். இச்சூழ்நிலையில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஹன்சிகாவின் மகளான் மானஸ்வியும் சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகியான ஹன்சிகா தான் படத்தை மொத்தமாக தாங்கிக் கொண்டுச் செல்கிறார். மகளை தேடி அலையும் காட்சிகளில் படம் பார்க்கும் நம்மையும் கண்கலங்க வைத்துவிட்டார் ஹன்சிகா.
சில நிமிடங்களே காட்சி தந்தாலும், தனககான காட்சியை சிறப்பாக மிரட்டலாக கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார் சிம்பு. ஆக்ஷன் காட்சியை சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார்கள்.
எப்போதுமே ஒரே முக பாவனையுடன் வலம் வருகிறார் ஸ்ரீகாந்த். தம்பி ராமையா மற்றும் கருணாகரன் இருவரும் படத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை செய்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் சிறுமிகள் கடத்தல், பாலியல் கொடுமை போன்ற கதைகளை சுமந்து வந்த படங்களில் மஹாவும் இணைகிறது. படத்தில் ட்விஸ்ட், அதிரடி, மிரட்டல் என எதாவது இருக்கிறதா என்று கேட்டால், எதுவுமே இல்லை என்று கூறி கடந்து விட்டு செல்லலாம்.
லக்ஷ்மண் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகள் மட்டுமே சற்று மாறுபட்டு ரசிக்க வைத்துள்ளது. ஜிப்ரான் இசை ஓகே ரகம் தான்.
சிம்பு & ஹன்சிகாவின் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன. ஹன்சிகாவிற்கும் மானஸ்விக்குமான காட்சிகளையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதற்காகவே ஒரு முறை மஹா’விற்கு விசிட் அடித்துவிட்டு வரலாம்.