Spotlightஇந்தியாவிளையாட்டு

லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்… மரடோனா இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரம்!

கால்பந்து உலகின் ஜாம்பவான் மாரடோனாவின் உடல், அர்ஜெண்டினாவில் லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த டியாகோ மாரடோனா கடந்த 25ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இதையடுத்து அவர் உடல் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள அதிபர் மாளிகையான காஸா ரோஸாடா என்ற இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு வந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஆதர்ஷ நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் விட்டு அழுதபடி காணப்பட்ட சிலர் பூக்கள், கொடிகள், டி ஷர்ட்டுகளை அவர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்ணான்டஸ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பலரும் கைகளைத் தட்டி மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

10 மணி நேரமாக நீடித்த இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, மேலும் அதிகமாக ரசிகர்கள் திரண்டதால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.

அப்போது போலீசாரை நோக்கி பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் வீசப்பட்டதால், ரப்பர் தோட்டாக்கள் அடங்கிய துப்பாக்கியால் சுட்டும் ரசிகர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இறுதிச்சடங்குகளுக்குப் பின், அர்ஜென்டினா தேசியக் கொடி போர்த்திய மாரடோனா உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பியுனஸ் அயர்ஸ் சாலையில் இருபக்கங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு பாட்டுப் பாடியும், கைகளைத் தட்டியும் இறுதி மரியாதை செலுத்தினர்.

இறுதியாக பியூனஸ் அயர்சின் புறநகர் புறநகர் பகுதியில் பெல்லா விஸ்டா கல்லறையில், அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாரடோனா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button