Spotlightவிமர்சனங்கள்

மேற்குத்தொடர்ச்சி மலை விமர்சனம் 4/5

மக்களின் வாழ்வாதாரத்தை வெளிக்கொண்டு வரும் படங்கள் ஒரு சில மட்டுமே வந்து சென்றுள்ளன. அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் விஜய்சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம்தான் “மேற்கு தொடர்ச்சி மழை”.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கதையின் நாயகன் (ரங்கசாமி)ஆண்டனி. தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் சில பொருட்களை மலை உச்சிக்கும், அங்கு இருக்கும் ஏலக்காய்களை மூட்டையில் கீழே எடுத்து வரும் ஒரு சுமை கூலி வேலை பார்த்து வருகிறார் நாயகன்.

உழைத்து வரும் பணத்தை வைத்து ஒரு இடத்தை வாங்கி அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்பது ரங்கசாமியின் நீண்ட நாள் கனவு. முதல் முறை நிலத்தை வாங்கும் போது சில இடையூறுகளால் வாங்க முடியாமல் போகிறது

இச்சயமத்தில் நாயகி(காயத்ரி கிருஷ்ணா)யுடன் திருமணம் குழந்தை என நாயகனின் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இடம் ஒன்று விலைக்கு வர, அந்த இடத்தை நாயகன் விலைக்கு வாங்கினாரா.. ??? அதற்காக அவர் சந்தித்த இன்னல்கள், ஒரு விவசாயின் வாழ்க்கை, என அனைத்தையும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒருசேர கொண்டு வந்து சேர்த்திருகிறார் இயக்குனர்.

அதிகாலை 4 மணியளவில் நாயகனின் அன்றாட வாழ்க்கை கிளம்பும் பயணம், மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிக்கு செல்லும் வரை நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் வில்லனாக காலத்தின் சுழற்சியும்,சுழ்நிலையுமே அமைகின்றன.

கதையின் நாயகனாக வரும் ஆண்டனி இப்படத்தில் நடிக்காமல் வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஜோக்கர் படத்தில் நல்ல கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணா, இப்படத்தின் நாயகியாக நடித்தது படத்திற்கு ஒரு பலம் தான்.. இவருக்கே பல விருதுகள் வழங்கலாம் போல..

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். தன் மரணம் தன்னை நெருங்கும் தருவாயிலும் என் மூடையை நான் தான் சுமப்பேன் என வைராக்கியம் பிடிக்கும் மூடை சுமையாளி மரணிக்கும் போது கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கிறது..

தன் நீண்ட நாள் கனவான விவசாய இடத்தை வாங்கும் தருவாயில், விலைக்கு வாங்கி வந்த ஏலக்காய் மூடை மலையிலிருந்து விழும் காட்சியில் நம்மை ஒரு கணம் சிலிர்க்க வைத்து விடுகிறார் ஒளிப்பதிவாளர்.

இயக்குனர் லெனின் பாரதி, ஒவ்வொரு காட்சியிலும் தன் மெனக்கெடலை காட்டியிருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. மனநிலை சரியில்லாத பாட்டி, மலை மேட்டில் டீக்கடை வைத்திருக்கும் தாத்தா, கணக்குப்பிள்ளை , முதலாளி, கங்கானி, தொழிலாளிகளுக்காக போராடும் கம்யூனிஸ்டுகாரர் என அனைத்து கதாபாத்திரமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

வளர்ச்சி என்ற ஒன்றிற்காக எத்தனை அழிவுகளை சந்திக்கிறோம் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கிராமத்திற்குள் சிறிய அளவில் விவசாய மருந்து கடை வைத்திருந்தவர், நாளடைவில் ரியல் எஸ்டேட் அதிபதியாக வளர்ந்து நிற்பதும், அந்நேரத்தில் விவசாயின் நிலையையும் காட்டும்போது நாட்டின் வளர்ச்சி நல்லதா கெட்டதா என்பதை நமக்கு ஆணியில் அடித்தாற்போல் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஏலக்காய் மூட்டையை சுமந்து செல்லும்போது வரும் ஒரு வீரமான கதையும், மனநலம் பாதித்த பாட்டியின் கதையும் கவனிக்க வைக்கிறது.

ராஜா ராஜா தான் ..

தேவையான இடங்களில் மட்டும் கதைக்கு தேவையான பின்னநி இசை கொடுத்தது இளையராஜாவுக்கே உரித்தான ஒரு செயல்.. சூப்பர்..
கதையின் பயணத்தில் வரும் பாடல்களும் ரசிக்க வைத்துள்ளன.

படத்தின் மிகப்பெரிய பலமாக கூறினால் அது ஒளிப்பதிவு தான். படத்தின் முதல் காட்சியான மழைப்பொழிவை கொடுத்ததிலே ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் வேலைப்பாடுகளை நாம் பாராட்ட ஆரம்பிக்கலாம்.

போன், வாட்ஸ் அப் என எதுவும் இல்லாத அந்த வாழ்க்கை நாமலும் வாழ வாய்ப்பு எட்டாத என ஏங்கும் மனதுகள் ஏராளம் வரலாம்(படம் பார்த்த பிறகு )

பண லாபத்திற்காக படத்தை தயாரிக்காமக் ஒரு வாழ்வியலை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு இப்படத்தை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்…

மேற்கு தொடர்ச்சி மலை:

மலை போல் இல்லாமல்
மனம் போல் வாழத்துடிக்கும்
வாழ்வியல் கதை..

நிச்சயம் இந்த வாழ்வியல் உங்களை ரசிக்க வைக்கும்.

படம் பார்த்தால் உங்கள் கண்களும்(கண்ணீர்) கைகளும்(கைத்தட்டல்) மட்டுமே பதில் கூறும்….

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close