
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’.
பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், பாடகர் மனோ, இசையமைப்பாளர் சிற்பி, கானா பாலா, ஆர்.கே. அன்புசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் பேசிய திருமாவளவன், ‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைப் பாராட்டியதுடன், சிறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கு அரசு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பாடகர் மனோ தனது மகன் ஷாகிர் மனோ உள்ளிட்ட படக்குழுவினரின் உழைப்பைப் பாராட்டி, திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தினார். கானா பாலா, ஷாகிர் மனோவின் நடிப்புத் திறமையைப் பாராட்டியதுடன், இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிவித்தார்.
இப்படத்திற்கு நள இளந்திரையன் இசையமைத்துள்ளார். எம்.ஜி. ராய் ஒளிப்பதிவையும், சேது ரமணா படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
‘மௌன மொழிகள்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





