தமிழ்நாடு

தகாத உறவை பார்த்த தம்பியை கொலை செய்த அண்ணன் – தங்கை

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் – ஆதிபராசக்தி தம்பதிக்கு சரத்குமார் (20), சௌந்தர்யா (17), சிவக்குமார் (15) என 3 பிள்ளைகள். குடும்பச்சூழல் காரணமாக கேசவன் 2 மாதங்களுக்கு முன்பு சவுதி சென்றுவிட, சரத்குமாரும் சௌந்தர்யாவும் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கரும்பு வெட்டும் தொழிலுக்குச் சென்று வந்துள்ளனர்.

கடைக்குட்டியான சிறுவன் சிவக்குமார் மட்டும் எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பாமல் மாயமானார். அன்று இரவு 11 மணி அளவில் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காப்புக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான் சிறுவன் சிவக்குமார்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் ராக்கி சிறுவனின் வீட்டுக்கே திரும்ப வந்து நின்றதால் தாய் பராசக்தி மற்றும் அண்ணன் சரத்குமார் மீது தங்கள் சந்தேகப் பார்வையை பதித்தது காவல்துறை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை கொலையாளியைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக சிறுவன் சிவக்குமாரைக் கொலை செய்ததாக அவரின் அண்ணன் சரத்குமார் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடந்தார். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் காரணங்கள் தெரியவந்தன.

கொலை செய்யப்பட்ட சிறுவன் சிவக்குமாரின் அண்ணன் சரத்குமார், தன் சித்தி புஷ்பா மற்றும் உடன்பிறந்த தங்கையான சௌந்தர்யா இருவரிடமும் தகாத உறவை வைத்திருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுவன் சிவக்குமார் அண்ணன் சரத்குமாரும் அக்கா சௌந்தர்யாவும் நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டு இருவரையும் கண்டித்திருக்கிறான். ஆனால், சிவக்குமார் அதை யாரிடமும் சொல்லாத நிலையில், ஒருவேளை வெளியில் கூறிவிட்டால் என்னாவது என்று சரத்குமார், சௌந்தர்யா, புஷ்பா மூவரும் பயத்தில் இருந்திருக்கின்றனர். இறுதியாக சிவக்குமாரை கொலை செய்வதுதான் சரி என்று 3 பேரும் முடிவெடுத்திருக்கின்றனர்.

அதன்படி கடந்த 28-ம் தேதி மாலை 4 மணிக்கு உடும்பு பிடிக்கலாம் என்று கூறி 3 பேரும் சிவக்குமாரை காப்புக் காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அடர்ந்த காட்டுக்குள் சென்றதும் அங்கிருந்த சிறிய பாறைகளுக்கு கீழ் உடும்பு இருக்கிறதா எனச் சிவக்குமாரை பார்க்கும்படி கூறியிருக்கிறார் சரத்குமார். இவர்களின் திட்டத்தை அறியாத சிறுவன் சிவக்குமார் குனிந்து உடும்பைத் தேடினான்.

அப்போது சிவக்குமாரின் தலையை பாறையின் இடுக்கில் வைத்து அழுத்திய சரத்குமார், கையில் வைத்திருந்த கரும்பு வெட்டும் கத்தியால் தம்பி என்றும் பாராமல் கழுத்தைக் கொடூரமாக அறுத்திருக்கிறார். அதில் சத்தம் போட்டு துடித்த சிவக்குமாரின் கை மற்றும் கால்களை அக்கா சௌந்தர்யாவும் சித்தி புஷ்பாவும் பிடித்துக்கொண்டுள்ளார். பின்னர் சிவக்குமார் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதும், 3 பேரும் வெவ்வேறு திசைகளில் சென்று வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை 3 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள புதரில் மறைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சரத்குமார். அன்று இரவே அதே ஊரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்று சிவக்குமாரை தேடுவதுபோல நாடகமாடியிருக்கிறார் சரத்குமார். எங்கு தேடியும் கிடைக்காததால் வீட்டுக்குத் திரும்பலாம் என்று அனைவரும் கூறியபோது, சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்லலாம் என்று கொலைசெய்யப்பட்ட குன்றைக் காட்டியிருக்கிறார் சிவக்குமார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பும்போது இறுதியாகப் பாறையின் கீழ் டார்ச் லைட் அடித்துப்பார்க்கும்படி சரத்குமார் கூறியுள்ளான். அப்போதுதான் சிவக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. அன்று இரவு சிவக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு காவல்துறையினர் சென்றபோது தம்பி இறந்துவிட்ட சோகத்தில் சரத்குமார் மயக்கமடைவதுபோல் நடித்து நாடகமாடியுள்ளார். இந்தக் கொடூரமான கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றிய சரத்குமார், சௌந்தர்யா, புஷ்பா ஆகிய மூவரையும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button