
நாயகன் குணா, ஒரு கிராமத்தில் பூம் பூம் மாடு வைத்து வீடு வீடாக சென்று குறி வாக்கு சொல்லி பிழைப்பு நடத்தி வருகிறார். அந்த கிராமத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட, அங்கிருந்து வேறு ஒரு கிராமத்திற்கு தனது மாடு கந்தாவுடன் செல்கிறார்.
அங்கு நாயகி காவியாவை சந்திக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களின் காதலுக்கு காவ்யாவின் அம்மா மறுப்பு தெரிவிக்கிறார். பூம் பூம் மாடு வைத்து குறி சொல்லும் பிழைப்பை விட்டு வேறு ஒரு வேலைக்கு சென்றால் தான் சம்மதிப்பதாக கூறிவிடுகிறார் காவ்யாவின் அம்மா.
ஆசையாக ஆசையாக தனது உடன் பிறப்பாக வளர்த்த தனது மாடு முக்கியமா..? காதலி முக்கியாமா..?? எதை தேர்ந்தெடுத்தார் நாயகன் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் குணா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். அந்த மாட்டுடன் ‘கந்தா.. கந்தா….’ என பேசும் உரையாடல்கள் ஒரு சகோதரத்துவமான நட்பை வெளிப்படுத்தியுள்ளார். மாட்டுக்கும் அவருக்குமான பாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.
நாயகி காவ்யா கிராமத்து தேவதையாக வந்து நிற்கிறார். இந்த கதைக்கு ஏற்ற நாயகியாகவும் வந்து நின்று கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
ஹலோ கந்தசாமி ஆங்காங்கே ஒரு சில இடத்தில் காமெடியும், ஒரு சில இடத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
கணேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நல்ல ஒரு உயிர் இருந்தாலும், ஓட்டம் இல்லாதது சற்று சோர்வடைய வைத்திருக்கிறது.
ப்ர்த்வி மற்றும் விஜய் ஆனந்த் இசை ஓகே ரகம்..
ஜெயன் உன்னிதன் குறைவான ஒளியை வைத்து கண்களுக்கு கிராமத்து பின்னனியை அழகு படுத்தி காட்டியிருக்கிறார். அழகுதான்.
கார்த்திக்கின் படத்தொகுப்பு ஷார்ப்.
க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கும்.
கயிறு – இன்னும் சற்று ஃபீலிங்க்ஸை ஏற்றியிருக்கலாம்.





