Spotlightவிமர்சனங்கள்

பரியேறும் பெருமாள் – விமர்சனம் (4/5)

இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பல வருடங்கள் பணிபுரிந்த மாரி செல்வராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘பரியேறும் பெருமாள்’.

2005 ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் அதுவும் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் அப்பகுதியின் மண்ணின் மைந்தனான இயக்குனர் மாரி செல்வராஜ்.

கதை முழுவதும் திருநெல்வேலியில் நடக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நமது பரியேறும் பெருமாளான கதிர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகன் கதிர் சட்டக்கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரி வாழ்க்கையை துவங்குகிறான்.

ஆங்கில மொழியில் படிப்பதற்கு தட்டி தடுமாறும் கதிர், அங்கு பயிலும் வேற்று சாதி பெண்ணான ஆனந்தி ஆங்கில மொழியை கற்றுக் கொடுக்கிறார்.

அங்கு ஏற்படும் அந்த பழக்கம், ஆனந்தியின் அப்பா, அண்ணன் என அனவரையும் அவர்களது சாதியின் வெறியை அதிகரித்து கதிரை துன்புறுத்துகின்றனர்.

அவர்களது சாதி வெறியின் பிடியில் இருந்து கதிர் எப்படி தப்பித்தார், என்பதே படத்தின் மீதிக் கதை.

கதிருக்குள் இப்படி ஒரு கலைஞனா என அனைவராலும் நிச்சயம் பாராட்டத் துடிக்கும் ஒரு கதாபாத்திரம். படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. மிக இயற்கையான நடிப்பில் உச்ச நடிகர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய நடிகனாக வலம் வருவார் நிச்சயமாக. கல்யாண நிகழ்ச்சியில் ஒரு ரூமுக்குள் அவர் அடிவாங்கும் காட்சிகளிலும், வாழைத்தோப்புக்கள் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் கண்கலங்க வைக்கிறார்.

கயல் ஆனந்தி, இதற்கு முன் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், இதுவே இவருக்கான அடையாளம் போல் மிகவும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தந்தை மேல், அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்துவதிலும், கதிர் மீது நல்ல நட்பு பாராட்டுவதிலும் குழந்தைத்தனமான ஒரு வெகுளி நடிப்பை காட்டியுள்ளார்.

படத்தின் முதல் காட்சியிலேயே வரும் கருப்பி என்னும் நாய், இரயிலில் அடிபட்டு இறந்து விட, அதன் இழப்பை ஒரு பாடலிலே காட்டியிருப்பார் இயக்குனர்… காட்சிகளில் கண்கள் கலங்கின. அந்த கருப்பியின் பாதிப்பை க்ளைமாக்ஸ் காட்சியில் பிரதிபலிக்கும்படியாக வைத்தது இயக்குனருக்கான கைவண்ணம்.

படத்தின் சைலண்ட் கில்லராக வருவது, மற்றொரு சாதியினை சேர்ந்த கராத்தே வெங்கடேஷ் தான். இவர் தனது சாதியை சேர்ந்த பெண்கள் யாரேனும் வேற்று சாதியை சேர்ந்த ஒருவனை காதலித்தால் அவர்களை யாருக்கும் தெரியாமல் விபத்துபோல் அந்த கொலையை செய்து விட்டு வந்து விடுவார். தனது முரட்டுத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு வில்லனின் வரவு.

யோகிபாபுவின் காமெடி படத்தின் ஹைலைட். நான்கைந்து காமெடி காட்சிகளில் திரையரங்குகளை சிரிப்பலைகளில் மிதக்க வைக்கிறார். மேலும், கதிருக்கு நல்ல நண்பனாக தன்னை காட்டுவதிலும் யோகிபாபு அழகுதான்.

தனது கலைக்காக சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிருக்கு அப்பாவாக வரும் தங்கராஜ். காட்சிகளில் கண்களை கண்ணீரில் மிதக்க வைக்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சியான கருப்பியை காட்டுவதில் இருந்து, க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு டீ க்ளாஸ்க்கு நடுவில் ஒரு பூ வைத்து முடிக்கும் காட்சி வரை தனது ஒளிப்பதிவு திறனை செம்மையாக செய்து முடித்திருக்கிறார் கேமரா மேன் ஸ்ரீதர்.

சந்தோஷ் நாராயணின் பாடல்கள் அனைத்தும் ரகம்… பின்னனி இசையும் கதையோடு பயணித்து வருகிறது.

இது போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் அறிந்து தயாரித்து வரும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்திற்கும் வாழ்த்துக்கள்.

தென் தமிழகத்தில் தாமிரபரணியில் கிடைத்த தாமரையாய் தனது பல வருட உழைப்பை ”பரியேறும் பெருமாள்” படத்தின் மூலமாய் கொடுத்து சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ”மாரி செல்வராஜ்” தமிழ் சினிமான் பொக்கிஷம்.

பரியேறும் பெருமாள் – தென்னாட்டு சமூகத்தின் வரையப்படாத ஓ(கா)வியம்….

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close