Spotlightசினிமா

பார்த்திபன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற P.U. சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான குரு துளசி அவர்களின் மாணவியான P.U. சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.

J. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான P.U. சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அரங்கேற்ற நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்த விழாவில் தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பத்ம பூஷண் விருது பெற்ற பரதநாட்டியக் கலைஞர் சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுப்ரஜாவை பாராட்டி ஆசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா மொய்தீன், வரதராஜன், நடிகர் இளவரசு, ஒளிப்பதிவாளர்கள் ரத்னவேலு, செல்வகுமார், எழுத்தாளர் மற்றும் நடிகர் கவிதா பாரதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில்வேல் மற்றும் சுங்கத்துறை இணை ஆணையர் டாக்டர் சி. சரண்யா (IRS) ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினர்.

குரு துளசியின் நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பில், புஷ்பாஞ்சலி முதல் மங்களம் வரை பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுப்ரஜாவின் துல்லியமான அசைவுகள், அபிநயம் மற்றும் கலைநயம் நிறைந்த நடன நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

இசைக்குழுவில் தென்காசி சமய்குமார் (வாய்ப்பாட்டு), எஸ்.வி. ரமணன் (மிருதங்கம்), ஆர்.டி. ஜெகதீசன் (வயலின்), நிமல் வர்ஷன் (புல்லாங்குழல்) ஆகியோர் இசையமைத்தனர். ஒப்பனையை கீதா மணிமொழி மேற்கொண்டார்.

திரையுலகினர், கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்ற இந்த அரங்கேற்ற விழா, தமிழர் பாரம்பரிய கலை மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Facebook Comments

Related Articles

Back to top button