Spotlightசினிமா

நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’… ஆகஸ்ட் 14-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இளம் நட்சத்திரம் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில், நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக காணொளி மூலம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் கூறுகையில், “‘ஹாய்’ என்பது அதன் பெயரைப் போலவே எளிமையான, இனிமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத குடும்ப திரைப்படங்களின் உணர்வை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன் இயக்கியிருப்பதும், நயன்தாரா – கவின் கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button