அறிமுக இயக்குனர் மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், சார்லஸ் வினோத், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி நாளை திரை காணவிருக்கும் திரைப்படம் தான் “போகுமிடம் வெகுதூரமில்லை”.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுநந்தன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்.
சிவா கிளாரி படத்தினை தயாரித்திருக்கிறார்.
சென்னையில் அமரர் ஊர்தி வைத்து தனது வாழ்க்கை ஓட்டுபவர் தான் விமல். இவரின் மனைவியான மேரி ரிக்கெட்ஸ் நிறை மாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கிறார் விமல்.
பிரசவத்திற்காக பணம் தேவைப்பட, அதற்காக வேலைக்குச் செல்கிறார் விமல். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பெரியவரின் பிணத்தை எடுத்துச் செல்ல பணம் வாங்குகிறார் விமல்.
பிணத்தை எடுத்துக் கொண்டு தனியாக தனது ஊர்தியில் பயணிக்கிறார் விமல். இறந்து போனவரின் உடலை பெற திருநெல்வேலியில் இரு பிரிவினர் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில், சென்னையை தாண்டியதும் கருணாஸ் வழிப்போக்கனாக விமலின் ஊர்தியில் ஏறிக் கொள்கிறார்.
கூத்து கலைஞனான கருணாஸ், தனது கலைக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி வாழ்க்கையை வெறுத்துப் போன ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் கருணாஸ்.
இந்நிலையில், ஊர்தியில் இருந்த பிணம் காணாமல் போய்விடுகிறது. இதனால் விமல் மற்றும் கருணாஸ் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
ஒரு பக்கம் பணத்தேவை, ஒரு பக்கம் பிணத்தை வைத்து பிரச்சனை என இரு பக்கமும் விமலுக்கு பிரச்சனை வருகிறது.
அதன்பிறகு விமல் என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகன் விமல், சென்னை மொழியில் பேசும் வசன உச்சரிப்பு இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரம். மிகவும் நேர்த்தியாக நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விமல். இப்படியொரு பிரச்சனையில் சிக்கி விட்டதாக எண்ணி கதறி அழும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுத்த நடிப்பாக இருக்கட்டும் இரண்டு இடத்திலும் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.
கருணாஸை மற்றொரு கதாநாயகன் என்று தான் சொல்ல வேண்டும். கூத்து கலைஞனாக நடித்து காட்டும் இடங்களில் என்னப்பா இந்த மனுஷன் இப்படி நடிக்குறாரு என்று கேட்க வைக்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்கவும் வைத்துவிடுகிறார்.
யாரும் இதுவரை தொடாத ஒரு கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் ராஜா. கதை நகர்த்திச் சென்ற விதமும் பாராட்டுதலுக்குறியது.
க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பலம் தான். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் குத்து பாடல் ரகம் தான்.
போகுமிடம் வெகுதூரமில்லை – மனிதநேய பயணம்.