Spotlightசினிமாவிமர்சனங்கள்

மாமன்னன் – விமர்சனம் 4/5

யக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய மாமன்னன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கதைப்படி,

சேலம் மாவட்டத்தில், காசிபுரம் தொகுதியின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வடிவேலு எம் எல் ஏ-வாக இருக்கிறார். இவரது, மகன் உதயநிதி ஸ்டாலின், அடிமுறை கற்றுக் கொடுக்கும் ஆசானாக வருகிறார்.

சுமார் 15 வருடங்களாக தனது தந்தையோடு பேசாமல் இருக்கிறார் உதயநிதி. அதற்கு காரணம் சிறுவயதில் ஏற்பட்ட ஒரு சம்பவம், உதயநிதியின் மனதில் வடுவாக நிற்கிறது.

படிக்க இயலாத மாணவ, மாணவிகளுக்கு இன்ஸ்டியூட் ஒன்றை அமைத்து இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார் கம்யூனிஸ்ட்டான கீர்த்தி சுரேஷ்.

சூழ்நிலை காரணமாக, உதயநிதியின் கராத்தே பள்ளியில் அந்த இன்ஸ்டியூட்டை நடத்துகிறார் கீர்த்தி.

இதுஒருபுறம் இருக்க, உயர்ந்த சாதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தலைவரின் மகனாக வருகிறார் பஹத் பாசில். இவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் கட்சியில் தான் எம் எல் ஏ-வாக இருக்கிறார் வடிவேலு.

எப்போதும் பஹத் பாசிலின் முன்னர் அமராமல் நின்று கொண்டே இருக்கிறார் வடிவேலு. காரணம் சாதி என்ற ஒன்று.

ஒருகட்டத்தில், பஹத் மீதான எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்கிறார் உதயநிதி. இதனால், வடிவேலுவையும் உதயநிதியையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் பஹத்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருக்கும் தனது அப்பா மாமன்னனை( வடிவேலு ) நாற்காலியில் அமருமாறு கூறுகிறார் உதயநிதி.

”என் முன்னாடியெல்லாம் உங்க அப்பா உட்கார மாட்டாரு” என பஹத் கூற, கோபம் ஏறுகிறது உதயநிதிக்கு.

தன் மகனுக்காக நாற்காலியில் அமர்கிறார் வடிவேலு. இதை பார்த்த பஹத் இருவரையும் அடிக்கிறார்.

இந்த விவகாரம் விஸ்வரூபமாக மாற, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பகாட்சியில், வடிவேலுவை பார்க்க வரும் சிலரை, நாற்காலியில் அமர்ந்து பேசுங்கள் என்று கூறுகிறார் வடிவேலு.. இல்லை பரவாயில்லை என அனைவரும் கூற, இல்ல இல்ல யாரா இருந்தாலும் உட்கார்ந்து தான் பேசணும் என்று சாதாரணமாக கூறுகிறார் வடிவேலு..

அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை… அந்த வார்த்தைக்குப்பின்னால் இருக்கும் வலி என்னவென்று., சாதாரண நாற்கலியில் அமரும் பிரச்சனையா.? என்று பார்ப்பவர்களுக்கு அதில் இருக்கும் வலி மற்றும் சமூக நீதி என்னவென்று அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.

படத்தின் மிகப்பெரும் பலமே படத்திற்கான கதாபாத்திரங்கள் தான்… வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் , கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், உதயநிதியின் தாயாக நடித்திருந்தவர், லால் என படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு வலியோடு பயணமாவதை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கீர்த்தி சுரேஷின் வலுவான கதாபாத்திரமாக இருந்தாலும், படத்திற்குள் அதற்கான வேலை சற்று குறைவு தான். இதுவரை பார்த்த வடிவேலு வேறு, இந்த படத்தில் பார்த்த வடிவேலுவின் முகமே வேறு… மாமன்னன் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு தனி முத்திரையாக இப்படத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் வடிவேலு.

நமக்கு மேல இருக்குறவன்கிட்ட தோக்கலாம்,
நம்ம கூட இருக்குறவன்கிட்ட தோக்கலாம், ஆனால்,
நமக்கு கீழ இருக்குறவன்கிட்ட மட்டும் தோக்கக் கூடாது…. இப்படியான கதாபாத்திரம் தான் வில்லனான பஹத் பாசிலோடது.,

”நான் கொல்றதுக்குக் கூட எதிரியா அவன் இருக்கக் கூடாது. அவனை தோற்கடிச்சி, எனக்குக் கீழ அவன கொண்டுவந்து தான் கொல்லணும்.” என்ற ஆழமான வசனங்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.,

சமூக நீதி பேசும் படங்கள் பல வந்தாலும், அதில் தனித்து நிற்கும் ஒரு காவியமாக இருக்கிறது இந்த மாமன்னன்.

இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களுக்கும் மேலாக ஓங்கி நின்று ஒலித்திருக்கிறது இந்த “மாமன்னன்”.

இதில் பேசப்பட்ட அரசியல், சமூக நீதி இவை இரண்டும் பேசு பொருளாக நிச்சயம் மாறும். அப்படி பேசு பொருளாக மாறினால், அதுவே மாமன்னனுக்கான மகுடமாக கருதப்படும்.

சிறு சிறு வசனங்கள், படத்திற்கான பெரும் பூஸ்ட்-அப் ஆக இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள்மற்றும் பின்னணி இசை மற்றொரு தூணாக வந்து நிற்கிறது.

இரயில் ஓடும் தண்டவாளமாக கதைக்கு ஏற்ற இசையாக கூடவே பயணித்தது அருமை.

சாதாரண வெளிச்சத்தையே “ப்ப்ப்பா செம” என அசத்தும்படியான ஒளிப்பதிவை கொடுத்து விட்டார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

சில இடங்களில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இருப்பது, ஒருசாரர்களுக்கு எரிச்சலை கிளப்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.

”பிறப்பால் அனைவரும் சமமே.. வேற்றுமை என்பது திறமையிலும் உழைப்பிலும் மட்டுமே இருக்கிறது” என்று கூறும் மாமன்னனின் வசனத்தோடு படம் முடியும் போது… “கைதட்டலில்” அரங்கம் அதிர்ந்தது..

மாமன்னன் – சமூக நீதி பேச வைத்த மன்னாதி மன்னன்… 

Facebook Comments

Related Articles

Back to top button