
தாதா 87 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய்ஸ்ரீ ஜி. இவர் அடுத்ததாக பவுடர் எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், பிரபல சினிமா பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், வித்யா பிரதீப், அனித்ரா, சிங்கம்புலி, வையாபுரி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தின் டீசரில் மனித கறி என்ற ஒரு காட்சியை வைத்து பரபரப்பாக்கிய இயக்குனர் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
அதிகாலையில் திருமணத்தை வைத்துக் கொண்டு இரவில் யாரையோ பார்க்கச் செல்கிறார் வித்யா பிரதீப்,
தனது மகளை கள்ளத்தனமாக திருமணம் செய்து கொண்ட ஒருவனை பழிவாங்கத் துடிக்கும் வையாபுரி,
சென்னை போலீஸ் கமிஷ்னர் வீட்டில் ஏதோ நடக்க, இன்ஸ்பெக்டர் ராகவன் தலைமையில் அந்த ஏரியா முழுவதும் தேடுதல் வேட்டை நடக்கிறது,
வீட்டில் வறுமை வாட்டி எடுக்க, அந்நேரத்தில் வேலை ஒன்று வர, பணத்தேவைக்காக அந்த வேலையை செய்ய செல்கிறார் சினிமா மேக்கப் மேனாக வரும் விஜய்ஸ்ரீ ஜி.
இதற்கு நடுவில் தொகுதி எம் எல் ஏ-வை கொலை செய்து, அந்த உடலை வெட்டி டீ-கேனில் பிரித்து எடுத்துச் செல்லும் அந்த ஏரியா வாலிபர்கள்.
இந்த 5 கதைகளும் ஒரே இரவில் நடக்கிறது. இந்த கதைகள் அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகிறது.
யார் யாருக்கு என்ன ஆனது.? இறுதியாக என்ன நடந்தது .? என்பதே படத்தின் மீதிக் கதை.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிகவும் மிரட்டலாக தோன்றி காட்சிக்கு காட்சி உயிர் கொடுத்திருக்கிறார் நடிகர் நிகில் முருகன். கண் பார்வையில் அசத்தி குரலில் மிரட்டி தனக்கு கொடுக்கப்பட கேரக்டரை பெர்ஃபெக்டாக செய்து முடித்து தனது முதல் படத்திலேயே தனி ஒரு முத்திரயை குத்தியிருக்கிறார் நிகில் முருகன்.
அப்பாவியான தோற்றம் கொண்டு, எளிய மனிதனாக தோன்றி தனது கேரக்டரை தெளிவாக நடித்து கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
எப்போதும் காமெடி நடிகராகவே வலம் வந்த வையாபுரி, இப்படத்தில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தன் மகளுக்காக அவர் செய்யும் செயலும் சரி அப்போது பேசும் வசனங்களிலும் சரி ரசிகர்களின் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.
படத்தில் முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப், சரியான தேர்வு என்றாலும், கதாபாத்திரத்தில் இன்னும் சற்று ஒன்றியிருந்திருக்கலாம் என்று தோன்றியது.
படத்தின் முக்கியமான காட்சிகளில் தோன்றிய இளையாவின் காட்சிகள் இளசுகளை இழுக்கும்.
சிங்கம்புலி, சிசர் மனோகர், மொட்டை ராஜேந்திரன் என நடிகர்கள் பட்டாளங்கள் அவரவர்களது கேரக்டர்களை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், லோக்கல் திருடர்களாக நடித்திருக்கின்றனர் ஆதவன் மற்றும் சில்மிஷம் சிவா. ஆதவனை விட சில்மிஷம் சிவா பல இடங்களில் ஸ்கோர் செய்து கைதட்டல் பெறுகிறார்.
மிடுக்கான தோற்றமும் கம்பீரமான குரலும் கொண்டு இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சிங்கமாய் கர்ஜித்திருக்கிறார் “ஒற்றன்” துரை சங்கர். தமிழ் சினிமாவிற்கு போலீஸ் கதாபாத்திரத்திற்கென்று செய்து வைத்தவர் போல் ஒருவர் கிடைத்துவிட்டார். முன்னணி இயக்குனர்கள் விரைவில் இவரை கமிட் செய்வார்கள்…. சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது கோலிவுட்… வாழ்த்துகள் ஒற்றன் துரை சங்கர் அவர்களே…
படத்தில் நடித்த விக்கி, சதீஷ் முத்து, ஷாந்தினி என நடித்த நடிகர்கள் அனைவரும் கவனம் ஈர்த்தார்கள்.
இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி. இவர் இந்த படத்திற்கு பெரும் பலம் என்றே இவரை கூறலாம். அழ வைக்க ஒரு பாடலும், ஆட்டம் போட ஒரு பாடலும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பின்னணி இசையில் தனி ஒரு தனித்துவத்தை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
ராஜா பாண்டியின் இரவு நேர ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.
தாதா 87 படத்தில் எப்படி தனக்கென தனி முத்திரை பதித்தாற் போல கதைக்களத்தை அமைத்தாரோ அதே போல் இந்த படத்திலும் தனி கதைக்களத்தை அமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.
நிகழ்கால சம்பவங்கள் பலவற்றை இப்படத்தில் புகுத்தியிருப்பதால், படத்தின் கதாபாத்திரங்களோடு ரசிகர்கள் எளிதில் இணைய முடிகிறது.
பவுடர் – வேட்டையை ரசிக்கலாம்..