
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களுக்குப் பிறகு மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் தான் ‘ருத்ரதாண்டவம்’. திரெளபதி எழுந்த அதே சர்ச்சை ருத்ரதாண்டவம் படத்திற்கும் எழுந்துள்ளது.
கதைப்படி,
நாயகன் ரிச்சர்ட் மற்றும் நாயகியாக வரும் தர்ஷா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தர்ஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
நாயகன் ரிச்சர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். வட சென்னை காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் அவர், அங்கு ஒரு பிரச்சனையில் சிக்குகிறார்.
இந்த பிரச்சனையால் சஸ்பெண்ட் ஆகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் ரிச்சர்ட்.
எதிரிகளால் ஜோடிக்கப்பட்ட அந்த பிரச்சனையை முறியடித்து மீண்டும் பணிக்கு அமர்ந்தரா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ரிச்சர்ட், திரெளபதியில் கொடுத்த அதே நடிப்பை தான் இதிலும் கொடுத்துள்ளார். இன்னும் சற்று மெனக்கெடல் செய்து, தனது கதாபாத்திரத்திற்கு சற்று கூடுதல் பலம் சேர்த்திருக்கலாம். இருந்தாலும் ரொம்பவும் குறை சொல்லாத அளவிற்கு நடித்திருக்கிறார் ரிச்சர்ட்.
நாயகி தர்ஷாவிற்கு “மாமா… எனக்கு பயமா இருக்கு” என்ற டயலாக் மட்டும் தான் கடைசி வரைக்கும். இந்த ஒரு டயலாக் வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த படத்தையும் முடித்துவிட்டார் தர்ஷா. இருவருக்குமான ஒரு மெலிதான காதல் காட்சியை படத்தில் வைத்திருந்திருக்கலாம்.
படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் கெளதம் வாசுதேவ் மேனன். ஒரு அரசியல் கட்சி தலைவராக தனது கதாபாத்திரத்தை மிகவும் ஸ்டைலிஷாக மிகவும் கெத்தாக செய்து முடித்திருக்கிறார்.
ராதாரவி, மாளவிகா வினாஷ், கோபி, தம்பி ராமையா உள்ளிட்டோரின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது.
மனோ பாலா, இளங்கோ, காக்காமுட்டை விக்கி உள்ளிட்டோர் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாகத்தான் இருந்தார்கள்.
கதை ஒரு சாரா சென்று கொண்டிருக்கும் போது, தேவையில்லாத ஒரு சில இடைக்காட்சிகளை இணைத்ததால் சற்று கதையில் தொய்வு ஏற்பட்டதே தவிர, ருத்ரதாண்டவம் கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் தான்.
க்ளைமாக்ஸ் காட்சியில் தீபாவின் நடிப்பு கண்களில் ஈரத்தை எட்டி பார்க்க வைத்துவிடுகிறது.
பரூக் J பாஷாவின் ஒளிப்பதிவு படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது என்று கூறலாம்.
ஜூபின் பின்னனி இசை ஒரு சில படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஓட்டம் கொடுத்திருக்கத்தான் செய்துள்ளது.
ருத்ரதாண்டவம் – ருத்ரமான ஆட்டம் தான்…





