Spotlightவிமர்சனங்கள்

படைப்பாளன் – விமர்சனம்

தியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க தியான் பிரபு இயக்கியிருக்கும் படம் தான் “படைப்பாளன்”.

பல கனவுகளோடு பல ஊர்களிலிருந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் சினிமா படைப்பாளன் ஒவ்வொருவருக்கும் பிணைப்பான படமாக உருவாகியிருக்கும் படம்தான் இந்த “படைப்பாளன்”.

ரசிகர்களிடையே எந்த அளவிற்கு இந்த படைப்பாளன் பாதிப்பை ஏற்படுத்தினான் என்பதை பார்த்துவிடலாம்.

கதைப்படி,

நாயகன் தியான் பிரபு சினிமாவில் சாதிக்க நினைக்கும் ஒரு உதவி இயக்குனர். ஒரு கதையை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளரிடம் செல்கிறார் தியான் பிரபு. அந்த தயாரிப்பாளர் அவரின் கதையை எடுத்து ஒரு பிரம்மாண்ட இயக்குனரிடம் கொடுத்து பிரம்மாண்ட செலவில் படத்தை இயக்க திட்டமிடுகிறார் அந்த தயாரிப்பாளர்.

இதனால் மனமுடைந்த தியான் பிரபு, தனது கதையை திருடிவிட்டனர் என்று கூறி நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறக் கூறி தயாரிப்பாளர் பெரிதளவில் மிரட்டுகிறார். இவரின் மிரட்டலுக்கு தியான் பிரபு அடிபணிந்தாரா இல்லையா.? அதன்பிறகு தியான் பிரபுவிற்கு என்ன நடந்தது என்பதை திகில் கலந்த பதட்டத்தோடு மீதிக் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகன் தியான் பிரபு, துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் அக்கதாபாத்திரமாகவே மாறி ஒன்றியிருக்கிறார். ஒரு துணை இயக்குனரின் வலியும் வேதனையும் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆக்‌ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை பழிவாங்கும் காட்சி திரையரங்கை அதிர வைத்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு.

படத்தில் நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர் இருவரும் படத்தின் கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறார்கள். பேயை பார்த்து பயந்து நடங்கும் காட்சிகளில் மிரள வைக்கிறார்கள்.

காக்காமுட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள். வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார். இவரக்ள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் நம்மை பயமுறுத்தும் அளவிற்கு மிரட்டலாக இருக்கிறது. பாலமுரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடந்த கதை திருட்டு சம்பவத்தை மையப்படுத்தி, உதவி இயக்குனர்களின் வலியையும் வேதனையையும் கண்முன்னே நிறுத்தியதற்காக படத்தின் இயக்குனர் தியான் பிரபுவிற்கு முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் எந்தெந்த கதை திருடப்பட்டது என்பதையும் க்ளைமாக்ஸ் காட்சியில் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படைப்பாளன் – கொண்டாடப்பட வேண்டியவன் ..

Facebook Comments

Related Articles

Back to top button