Spotlightவிமர்சனங்கள்

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம் 3.5/5

தற்போது வரும் திரைப்படங்களை திரையரங்குகளில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய சூழல் அவ்வளவு எளிதாக அமைவதில்லை. குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்க வேண்டும் என்ற கருத்தினை குறிக்கோளாக கொண்டு படத்தினை இயக்கும் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்படியாக கார்த்தி ஹீரோவாக நடிக்க சூர்யா தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தினை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

விவசாயம், குடும்பம் இரண்டையும் தாங்கி பிடிப்பவனே கடைக்குட்டி சிங்கம்.

ஊர் பெரிய மனிதராக வரும் சத்யராஜ்ஜுக்கு நான்கு பெண்குழந்தைகள். ஆண் குழந்தைக்காக ஏங்கும் அவர், தன் மனைவி விஜியின் தங்கை பானுப்பிரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். பானுப்பிரியாவிற்கும் ஒரு பெண்குழந்தை பிறக்க, அதே சமயத்தில் விஜிக்கும் ஆண் வாரிசாக கார்த்தி பிறக்கிறார். ஆக, ஐந்து அக்காவோடு மிகப்பெரிய குடும்பாக வாழ்ந்து வருகிறார் கார்த்தி.

தன் குடும்பத்தின் மீதும், விவசாயத்தின் மீதும் அதீத காதலில் இருக்கிறார் கார்த்தி. அந்த குடும்பத்தையே பிரிக்கும் அளவுக்கு ஒரு காதலும் ஒரு மோதலும் உண்டாகிறது. அவற்றை எல்லாம் கார்த்தி எப்படி சமாளித்து குடும்பத்தின் ஒற்றுமையை காக்கிறார் என்பதே படத்தின் கதை.

தற்போது தமிழகத்தில் அழிந்து வரும் விவசாயத்தின் பெருமையை பல இடங்களில் தூக்கி பிடித்திருக்கிறார் கார்த்தி. விவசாயத்தின் அருமையை பல இடங்களில் தன்னுடைய வசனம் மூலம் பறைசாற்றியிருக்கிறார் பாண்டிராஜ்.

குணசிங்கமாக வாழ்ந்து தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் கார்த்தி. அவரது சினிமா கேரியரில் இது மிக முக்கியமான படமாக அமையும். பாசம், காதல், கோபம், என அனைத்திலும் தன்னுடைய நடிப்பில் மெருகேற்றிருக்கிறார்.

விவசாயத்தின் பெருமையை ஏற்றி பேசும்போதும் குடும்பத்துக்காக உருகி கண்ணீர் சிந்தும்போதும் நடிப்பழகு….

அழகியாக சாயிஷா. படத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வேடம். கச்சிதமாக செய்து இருக்கிறார்.

சத்தியராஜ், பானுப்பிரியா, பொன்வண்ணன், ஸ்ரீமன், இளவரசு, மவுனிகா, யுவராணி, மாரிமுத்து, சரவணன் உள்ளிட்ட அனைத்து அனுபவ நடிகர்களும் கதையோடு ஒன்றிய கதாபாத்திரம்.

சூரி கிடைக்கும் இடத்தில் எல்லாம் நமக்கு வெடி சிரிப்பு வரவைக்கிறார். பல படங்களுக்கு பிறகு சூரியின் காமெடிக்கு சிரிப்பு வருகிறது. அக்கா மகள்களாக வரும் பிரியா பவானி சங்கருக்கும் அர்த்தனாவுக்கும் கூட அருமையான வேடங்கள். ப்ரியா பவானி சங்கர் சற்று கூடுதல் அழகுதான்.

காளை மாடுகள் பலியானதற்கே துக்க வீடாக மாறும் குடும்பம், கிராமம் என கிராம வாழ்வியலை நம் கண் முன்னே வந்து நிறுத்தியது – சபாஷ்..

கேமரா மூலம் வேல்ராஜும், இசை மூலம் டி.இமானும் தங்களது பங்களிப்பினை செவ்வனே கொடுத்திருக்கின்றனர்.

எளிமையான, ஆழமான மெசேஜை, அழகான மனிதர்களோடும், அழகான காட்சிகளோடு கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்ஜுக்கு மீண்டும் ஒரு நன்றிகள்.

கடைக்குட்டி சிங்கம் – விவசாயத்தையும் குடும்பத்தையும் காத்த வீரிய சிங்கம்….

Facebook Comments

Related Articles

Back to top button