
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் ”ரிங் ரிங்”.
பிரசாந்த் டி எஃப் டெக் ஒளிப்பதிவு செய்ய வசந்த் இசைப்பேட்டை இசையமைத்திருக்கிறார். ஜெகன் நாராயணன் தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா இவர்கள் மூன்று ஜோடிகள். திருமணத்திற்குப் பிறகு இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுடன் டேனியல் அன்னி போப்பு இருக்கிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல், லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பிரவீன் ராஜாவிற்கு பிறந்தநாள் வர, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மொத்த டீமும் ஒன்று கூடுகிறது. டேனியல் தனது லிவ்விங் காதலியோடு கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியில் அனைவரும் கலகலப்பாக சிரித்து பேசி மகிழ்கின்றனர். அச்சமயத்தில் விவேக் பிரசன்னாவின் மொபைல் காணவில்லை என்று கூறி சற்று பதட்டமாகிறார். பின் மொபைல் கிடைத்துவிட, மொபைல் காணவில்லை என்றால் எதற்காக இப்படி பதட்டமாகிறாய் என்று உடன் இருந்தவர்கள் கேட்க, சற்று மழுப்பலாகவே பதில் கூறுகிறார்.
இச்சமயத்தில், ஒரு விளையாட்டை விளையாட ஆரம்பிக்கின்றனர். அனைவரது போனையும் எடுத்து டேபிளில் வைக்க, போன், மெசேஜ் என என்ன வந்தாலும் அதை அனைவரிடமும் வெளிப்படையாக காட்ட வேண்டும் என்பது தான் அந்த விளையாட்டு.

இப்படியாக இருக்க, முதலில் விவேக் பிரசன்னா ஆரம்பித்து இறுதியில் டேனியல் வரை அனைவரது பர்சனல்களும் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன்பிறகு இந்த ஜோடிகள் என்ன மாதிரியான மனநிலைக்கு மாறினார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களது இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். அனைவரும் தங்களது அனுபவ நடிப்பை அழகாகவே பயன்படுத்தி அக்கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். அதிலும், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால் இருவரும் நடிப்பில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்கள்.
நிகழ்கால வாழ்க்கையில் செல்போன்கள் குடும்பத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அனைவரது வாழ்விலும் அது என்ன மாதிரியான பிம்பத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இந்த மாதிரி நமக்கு நடந்திருக்கே அல்லது இந்த மாதிரி நமது நண்பனுக்கு நடந்திருக்கே என்று சொல்லும் அளவிற்கு இப்படத்தின் கதை நம் வாழ்வியலோடு கலந்த ஒன்று தான்.
திரைக்கதை, வசனம் இரண்டுமே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது.
காட்ச்களை அழகாக காட்டியிருப்பதில் ஒளிப்பதிவின் பங்கும் அலப்பறியது தான். பாசிடிவான க்ளைமாக்ஸ் காதலை வருட வைத்திருக்கிறது.
மொத்தத்தில்,
ரிங் ரிங் – ஜோடியாக பார்க்க வேண்டிய படம் தான்



