
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பழனி, த்ரிபதி ரவீந்திரா, செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரினி, ரியா ஜித்து, மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் சக்தித் திருமகன்.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷெல்லே ஆர் காலிஸ்ட். படத்தினை இசையமைத்து தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
கதைக்குள் சென்று விடலாம்..
தலைமைச் செயலகத்துக்குள் என்னென்ன வேலை ஆக வேண்டும் என்றாலும், கிட்டு(விஜய் ஆண்டனி) நினைத்தால் முடித்துவிடுவார். அந்தளவிற்கு பெயர் கொண்டவர். இடைத்தரகராக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கிறார்.
சாதாரண கவுன்சிலரில் ஆரம்பித்து சி எம் வரையிலும் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி ப்ரோக்கர் கமிஷன் பெற்றுக் கொண்டு அனைத்துவிதமான வேலைகளையும் செய்து முடிக்கிறார். இதையே தனது வேலையாக வைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

பெரும் நிறுவனத்தின் முதலாளியும் மத்தியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான சுனில் கிர்பழனியின் நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
பாலியல் சிண்டலில் ஈடுபட்டதற்காக சுனிலின் தங்கை கணவரை திட்டம் போட்டு கொலை செய்கிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் செயலில் சுனிலுக்கு சந்தேகம் வர, மத்தியில் இருந்து ஸ்பெஷல் போலீஸ் படையை இறக்கி விஜய் ஆண்டனியை வேவு பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஆராயிரம் கோடி பணத்தை விஜய் ஆண்டனி சம்பாதித்து வைத்திருப்பதையும் சுனிலின் தங்கை கணவரை விஜய் ஆண்டனி தான் கொன்றார் என்பதையும் கண்டறிகின்றனர்.
விஜய் ஆண்டனின் மற்றும் அவரது கூட்டாளி மற்றும் மனைவியும் தூக்குகிறது ஸ்பெஷல் போலீஸ் படை.
விஜய் ஆண்டனி எதற்காக இவையனைத்தையும் செய்தார்.? விஜய் ஆண்டனியின் நோக்கம் தான் என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு.

வழக்கமான நடிப்பை விஜய் ஆண்டனி கொடுத்திருக்கிறார். கதை தேர்வில் தன்னகத்தே தனித்துவத்தை நிரூபித்து வரும் விஜய் ஆண்டனி, இப்படத்திலும் அதை தரமாக கொடுத்திருக்கிறார்.
பேசும் வசனங்கள், பார்க்கும் பார்வை,உடல் மொழி என படத்திற்கு படம் நடிப்பில் தன்னை மெருகேற்றிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
வில்லனை மிகவும் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு. சுனில் கிர்பழனியின் நடிப்பு படத்திற்கு மிகவும் பலம். அதிலும், அவரது குரல் வில்லத்தனத்தை மேலும் கூட்டியிருக்கிறது. நாயகிக்கு பெரிதான ஸ்கோப் இல்லை என்றாலும், கண்களால் வித்தைக் காட்டிச் சென்றிருக்கிறார்.
விவேக் மறைவிற்குப் பின்னர், செல் முருகன் இப்படத்தில் பெரும் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். டெல்லி மேடம், டீக்கடைக்காரர், சிறுவயது விஜய் ஆண்டனி செய்தவர், என படத்தில் தோன்றிய அனைவருமே படத்திற்கு மிகப்பெரும் பலமாக நின்றிருக்கின்றனர்.
ஸ்பெஷல் கேரக்டரில் நடித்திருந்த வாகை சந்திரசேகர் தான் படத்திற்கு அடித்தளமே. அவரது, பெரியார் மொழிகள் கதைக்கு பெரும் வலு சேர்த்திருக்கின்றன. ஆங்காங்கே அவரின் கிறுக்கல்கள், பெரியாரின் கூற்று என அனைத்தும் கவனிக்க வைத்திருக்கின்றன.

தமிழ் சினிமாவில் உட்சத்தில் இருக்கும் இயக்குனர்கள் தொட்ட கதையை மிகவும் தைரியமாக கையில் எடுத்து அதை மிகவும் அழகாக படைப்பாக கொடுத்து இயக்குனர்களின் வரிசையில் டாப் 10 இடத்திற்குச் சென்று விட்டார் இயக்குனர் அருண் பிரபு.
தமிழகத்தில் இன்றளவும் நடக்கும் பல அரசியல் விவகாரங்களையும், விளையாட்டுகளையும் கண்முன்னே கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தமிழக மக்கள் என்னென்னவற்றிக்கெல்லாம் இன்னலாகின்றனர் என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் வசனங்கள் கூர்ந்து கவனிக்கும்படியாக இருந்தது. அதிலும், சுனில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றுமே நிகழ்கால அரசியலாக இருக்கிறதே என்று ஒரு கணம் யோசிக்க வைத்துவிடுகிறது.
தரை அரசியல் முதல் திரை அரசியல் வரையிலும் இத்திரையில் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர்.
இரண்டாம் பாதியில் சற்று கதையில் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
பாடல்கள் கதையோடு ஒன்றி நம்மை கிரங்கடிக்க வைத்திருக்கிறது. தேவையான அளவிற்கு பின்னணி இசையை பயன்படுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு படத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது.
சக்தித் திருமகன் – வெற்றித் திருமகன்.





