
ஜிவி பெருமாள் இயக்கத்தில் தர்ஷன் ப்ரியன், சார்மி விஜயலக்ஷ்மி, மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கெளரி, மிலா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் சரீரம்.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பாரதிராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார்.
ஜி வி பெருமாள் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
நாயகன் தர்ஷன் ப்ரியன் மற்றும் சார்மி விஜயலக்ஷ்மி இருவரும் கல்லூரி காதலர்கள். நாயகி சார்மியின் தந்தை மிகப்பெரும் கோடீஸ்வரர்.
ஒரே மகள் என்பதால், அதிகமான செல்லம் கொடுத்து மகளை வளர்க்கிறார். சார்மியின் தாய்மாமனாக வரும் மனோஜ், சார்மியை திருமணம் செய்து மொத்த சொத்தையும் தனக்கே சொந்தமாக்க நினைக்கிறார்.
தர்ஷன் மற்றும் சார்மியின் காதல் மனோஜ்க்கு தெரியவர, தர்ஷனை பலமாக அடித்து ஆற்றில் தூக்கி எறிந்து விடுகிறார். தர்ஷன் இறந்து விட்டதாக எண்ணி, சார்மி தற்கொலைக்கு முயல்கிறார்.
தர்ஷனை அவரது நண்பர்கள் காப்பாற்றி விடுகின்றனர். ஒரே மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருகட்டத்தில், இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர்.
தாங்கள் எங்கு சென்றாலும் தங்களை கொன்றுவிடுவார்கள் என்று அறிந்து கொண்ட ஜோடியினர், ஒரு விபரீத முடிவு ஒன்றை எடுக்கின்றனர்.
அதன்பிறகு, அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் தர்ஷன், கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். அதுவும், இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு நிச்சயமாகவே ஒரு துணிச்சல் வேண்டும். அப்படியான ஒரு நடிப்பை கொடுத்ததற்காகவே நடிகர் தர்ஷனை பெரிதாக பாராட்டலாம். நிச்சயம், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
நாயகியான சார்மி விஜயலக்ஷ்மி, அழகான தேவதையாக காட்சியளித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவருக்கான ஸ்கோப் அதிகமாக இருப்பதால், தனது நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
மேலும், இன்ஸ்பெக்டராக வந்த மலைச்சாமி, வக்கீலாக வந்த மதுமிதா, ஹீரோயின் அப்பாவாக வந்த புதுப்பேட்டை சுரேஷ், நீதிபதியாக வந்த பாய்ஸ் ராஜன் உள்ளிட்ட அனைவருமே படத்திற்கு பக்கபலமாக வந்து சென்றனர்.
வில்லனாக வந்த மனோஜ், படத்திற்கு சரியான தேர்வு தான் என்றாலும், படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் கண்ணாடி அணிந்து கொண்டு வந்தது ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஒரு நடிகனின் நடிப்பை கண்களின் வழியாகத் தான் பார்க்க முடியும். இதில், அதற்கான இடத்தை மனோஜ் ஒரு இடத்திலும் கொடுக்காதது பெரும் ஏமாற்றம் தான்.
படத்தின் கதையை மிகவும் தனித்துவமாக தேர்ந்தெடுத்து அதனை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பெருமாள். சமூகத்தில் நடக்கும் ஒரு சில அவலநிலைக்கு, வாழ வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்று துணிந்து எடுக்கும் முடிவு பாராட்டுதலுக்குறியது என்றாலும், ஒரு சில காட்சிகள் நாடகத் தன்மையாக இருந்தது சற்று போரடித்துவிட்டது.
குறைகள் சற்று எட்டிப் பார்த்தாலும், எடுத்த முயற்சிக்காக இயக்குனரையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டலாம்.
பாரதிராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையிலும் நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார். டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் இருவரும் ஒளிப்பதிவை வெளிச்சமாக கொடுத்திருக்கிறார்கள்.
சரீரம் – அழுத்தமான பதிவு..