
ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே நீதிமன்ற விசாரணையை மையமாகக் கொண்டு, இந்த முறை இன்னும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகவேல் (பிரேம்குமார்) மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரை முன்பகை காரணமாக சக போலீசாரே சுட்டுக் கொன்றார்களா? அல்லது மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார் அவரது மனைவி (வரலட்சுமி சரத்குமார்). வழக்கறிஞரான அவரே இந்த வழக்கில் ஆஜராகி நான்கு போலீசாருக்கு எதிராக வாதாடுகிறார்.
மறுபுறம், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத நிலையில், வழக்கறிஞர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி அவர்களுக்காக ஆஜராகிறார் நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி (சரவணன்).
இன்ஸ்பெக்டர் கனகவேலின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? நான்கு போலீசாரும் உண்மையிலேயே குற்றவாளிகளா? நீதிமன்றத்தில் நடக்கும் வாதப் போரில் வெற்றி பெறுவது யார்? என்பதே ‘சட்டமும் நீதியும் 2’ வெப் சீரிஸின் மீதிக்கதை.
முதல் பாகத்தில் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய சரவணன், இரண்டாவது பாகத்தில் இன்னும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
யாரும் ஏற்கத் தயங்கும் வழக்கைத் துணிச்சலாகக் கையில் எடுப்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பரிவு காட்டுவது, நீதிமன்றத்தில் நிதானமாக வாதங்களை முன்வைப்பது என ஒவ்வொரு காட்சியிலும் தனது அனுபவ நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
குறிப்பாக, எதிர்தரப்பு வைக்கும் ஆதாரங்களைத் தனது புத்திசாலித்தனமான கேள்விகளால் உடைக்கும் காட்சிகளில் சரவணனின் நடிப்பு சிறப்பு.
அவருக்கு இணையாக வரலட்சுமி சரத்குமாரும் மிரட்டியிருக்கிறார். கணவரின் மரணத்திற்கு நீதி கேட்கும் மனைவியாகவும், நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதாடும் வழக்கறிஞராகவும் இரண்டு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமாக வேகமாக வசனங்களைப் பேசும் வரலட்சுமி, இந்தத் தொடரில் நீண்ட நீதிமன்ற வசனங்களையும் தெளிவாக உச்சரித்து அசத்தியிருக்கிறார்.
சரவணன் ஒரு ஆதாரத்தை உடைத்தால், அடுத்த ஆதாரத்தை முன்வைத்து வரலட்சுமி நெருக்கடி கொடுப்பதும், அதிலிருந்து சரவணன் தனது வாதத் திறமையால் மீள்வதும் என இருவருக்கும் இடையிலான போட்டி தொடரின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
வழக்கமான வெப் சீரிஸ்களைப் போலக் கதையை அதிக நேரம் இழுத்தடிக்காமல், ஆரம்பத்திலேயே நீதிமன்ற விசாரணைக்குள் அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.
ஒவ்வொரு எபிசோடிலும் புதிய ஆதாரங்கள், எதிர்பாராத சாட்சியங்கள், அதிரடியான வாதங்கள் எனக் கதை நகர்வதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது.
குறிப்பாக, ஒவ்வொரு எபிசோடும் முடியும் இடத்தில் எழும் கேள்விகள் அடுத்த எபிசோடை உடனடியாகப் பார்க்கத் தூண்டுகின்றன.
சரவணனுக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் வாதப் போர், ஒரு கட்டத்தில் பூனை – எலி விளையாட்டைப் போல மாறி நீதிமன்றக் காட்சிகளைப் பரபரப்பாக்குகிறது.
இன்ஸ்பெக்டர் கனகவேலாக நடித்திருக்கும் பிரேம்குமாருக்கு ஆரம்பத்தில் குறைவான காட்சிகளே இருப்பதாகத் தோன்றினாலும், கதையின் முக்கியமான திருப்பங்களுக்கு அவரது கதாபாத்திரம் அடித்தளமாக அமைந்திருக்கிறது.
லாவண்யா, சிவின், கல்லூரி வினோத், ஆறு பாலா, கவிதா பாரதி, பீட்டர் ஜெ சந்திரன், பருல் சம்பாரியா, பவன், அக்ஷயா வி, பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தர்ராமன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சிறிய கதாபாத்திரங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ், நீதிமன்ற விசாரணையை மட்டுமே நம்பி கதையை நகர்த்தாமல், நான்-லீனியர் திரைக்கதை பாணியில் சம்பவங்களை அடுக்கி சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை நேர்த்தியுடன் ஒவ்வொரு எபிசோடையும் உருவாக்கியிருப்பது அவரது உழைப்பைக் காட்டுகிறது.
கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நீதிமன்றக் காட்சிகளின் பரபரப்பை உணர்த்துகிறது. விபின் பாஸ்கரின் பின்னணி இசை முக்கியமான திருப்பங்களுக்கு வலு சேர்க்கிறது.
நீதிமன்றத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட அரங்கம் தொடருக்குக் கூடுதல் பலம். தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்புச் செலவில் சமரசம் செய்யாமல் தரமான உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
பிளஸ்: சரவணன் – வரலட்சுமி இடையிலான வாதப் போர், விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நீதிமன்றக் காட்சிகள், பின்னணி இசை ஆகியவை தொடரின் முக்கிய பலங்கள்.
மைனஸ்: பெரும்பாலான காட்சிகள் நீதிமன்ற விசாரணையைச் சுற்றியே நகர்வதால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்குச் சில இடங்கள் மெதுவாகத் தோன்றலாம். சட்ட நடைமுறைகள் சார்ந்த நீண்ட விவாதங்களும் சிலருக்குச் சற்றுக் கடினமாக இருக்கலாம்.
சரவணன் – வரலட்சுமி இடையிலான சட்டப் போராட்டத்தில் இறுதியில் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பைத் தக்கவைத்து, கிளைமாக்சில் ஒரு முக்கியமான திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குநர்.
குறிப்பாக, வரலட்சுமியின் கதாபாத்திரம் தொடர்பான திருப்பமும், இன்ஸ்பெக்டர் கனகவேல் பற்றிய விடை தெரியாத கேள்விகளும் மூன்றாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
‘சட்டமும் நீதியும் 2’ வெப் சீரிஸ், வெறும் நீதிமன்ற விவாதங்களை மட்டுமே நம்பிய படைப்பாக இல்லாமல், மர்மம், சஸ்பென்ஸ், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான கிரைம் திரில்லர்.
சரவணனின் நிதானமான நடிப்பும், வரலட்சுமி சரத்குமாரின் அதிரடியான வாதங்களும் இந்த இரண்டாவது பாகத்தை ரசிக்க வைக்கின்றன.
சட்டமும் நீதியும் 2 – நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதங்கள்… ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கிரைம் திரில்லர்!





