
.நாயகன், துருவா சார்ஜா சிறு வயதில் தன் தந்தை மீது அளவில்லா பாசம் வைத்திருப்பவர். அவரது தந்தை வில்லனால் கொல்லப்படுகிறார். இதை அறியாத துருவா, தந்தை வருவார் என சில வருடங்கள் காத்திருக்கிறார். துருவாவின் தாயான பவித்ரா, ரவிஷங்கரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.
சில வருடத்திற்கு பின், தனது தந்தை இறந்துவிட்டதை அறிந்து மனம் உடைகிறார் துருவா. தந்தை இருந்த இடத்தில் ரவிஷங்கரை ஏற்றுக் கொள்ள முடியாத துருவா, அவரையும், ரவிஷங்கரின் முதல் மனைவி மகளையும் அடியோடு வெறுக்கிறார்.
அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் துருவாவின் ஆசை நிறைவேறியதா..?? இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக வரும் துருவா சார்ஜா, தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். உடலை முரட்டுத்தனமாக தயார் செய்து தனது கேரக்டரை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
சுமார் 40 கிலோ எடை குறைத்து சிறு வயது நாயகனாக தோன்றி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் துருவா.
பாசத்திற்காக ஏங்கும் மகனாகவும், காதலுக்காக ஏங்கும் காதலனாகவும், லோக்கல் ரவுடியாகவும் அசத்தியிருக்கிறார் துருவா. கன்னட மொழி நாயகனாக இல்லாமல், உள்ளூர் நாயகனாகவே முகத்தில் ஜொலிக்கிறார் துருவா.
இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும், கராபு பாடலாக இருக்கட்டும் இரண்டிலும் தனது நடனத்திறமையை செம்மையாக நிரூபணம் செய்திருக்கிறார் துருவா.
நாயகியாக வரும் ராஷ்மிகா அழகாக வந்து செல்கிறார். ரவிஷங்கர் , பவித்ரா மற்றும் வில்லனாக வரும் சம்பத் என அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.
சந்தன் ஷெட்டியின் இசை படத்திற்கு பலம் தான்.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறது. அதிலும் பாடல் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் வெறித்தனம்.
நந்தா கிஷோரின் இயக்கம் பிரம்மாண்டம்
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் செம திமிரு இன்னும் திமிராக இருந்திருக்கும்.
செம திமிரு – செம மிரட்டல்…