
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, அஸ்வின் குமார், நாஞ்சில் சம்பத், மற்றும் பழ கருப்பையா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “செம்பி”. பிரபு சாலமன் இயக்கத்தில் எந்த படம் வெளிவந்தாலும், அது சற்று உற்று நோக்கும் படமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. அப்படியாக இந்த படம் எந்த வகையில் கூர்நோக்கியுள்ளது என்பதை பார்த்துவிடலாம்.
கதைப்படி,
தாய் மற்றும் தந்தையை இழந்த பத்து வயது சிறுமி தான் நிலா (செம்பி). இவளை வளர்ப்பது அவரது பாட்டி கோவை சரளா.
கொடைக்கானல் பகுதியின் மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் இருவரும். காட்டில் இருக்கும் தேனை எடுத்து அதை விற்று தங்களது சிறு கூட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ஒருநாள், அங்கு வரும் பணக்கார வீட்டு வாலிபர்கள் மூவர், அங்கு துள்ளிக் கொண்டுச் சென்ற செம்பியை கற்பழித்து விடுகின்றனர்.
உயிருக்கு போராடிய செம்பியை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டுச் சென்று காப்பாற்றுகிறார் கோவை சரளா.

இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறது காவல்துறை. அந்த விசாரணை நடத்தும் காவல் ஆய்வாளர், பணம் பெற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கப் பார்க்கிறார். இதை அறிந்து கொண்ட கோவை சரளா , ஆய்வாளரை தாக்கி விட்டு தனது பேத்தியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து வருகிறார். அங்கிருந்து தம்பி ராமையாவின் பேருந்தில் ஏறி தப்பிச் செல்ல முயல்கின்றனர் இருவரும்.
செம்பியின் நிலைமையை வைத்து அரசியல் செய்கின்றனர் ஆளுங்கட்சி தலைவரான பழ கருப்பையாவும் எதிர்கட்சி தலைவரான நாஞ்சில் சம்பத்தும்.
இறுதியில் செம்பிக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்ததா.? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
பல படங்களில் பார்த்த மூலக்கதை என்றாலும், தனக்கான பாதையில் தனியாக பயணித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
படத்தின் முதல் பாதியை தூணாக தாங்கி நின்று தூக்கி நிறுத்தியிருக்கிறார் கோவை சரளா. காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து தனக்கான முத்திரையை பதித்து வைத்திருந்த கோவை சரளா, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
அதிலும், தனது பேத்தியை மூவர் சேர்ந்து கற்பழித்திருக்கிறார்கள் என்ற செய்தியறிந்ததும், மருத்துவமனைக்குள் திரிந்து கொண்டே சென்று ஓரமாக நின்று அழும் காட்சியில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்திருக்கிறார். முதல் பாதியில் பல இடங்களில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விட்டார் கோவை சரளா. கண்ணீர் வர வைத்ததில் பின்னணி இசையில் பின்னி எடுத்த நிவாஸ் கே பிரசன்னாவின் பணி அற்புதம்.
இரண்டாம் பாதியில் கோவை சரளாவின் காட்சியை குறைத்தது சற்று ஏமாற்றமே. செம்பியாகவே வாழ்ந்த நிலா என்ற சிறுமியின் நடிப்பு அல்ல சித்திரம் தான் என்று கூற வேண்டும். ஒரு இடத்தில் கூட நடிக்கிறார் என்ற எண்ணமே ஏற்படவிடாமல் நடிப்பில் அசத்தியிருக்கிறார் நிலா.
பிரபு சாலமன் இயக்கத்தில் தம்பி ராமையா நிச்சயம் இருப்பார். இதிலும் இருக்கிறார் ஆனால், என்ன சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுத்து ஒரு சில காட்சியை கெடுத்து வைத்திருக்கிறார்.
மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து பாராட்டைப் பெறுகிறார் அஸ்வின். ரசிகர்களின் மனக்கோட்டையில் ஏறி அமர்ந்திருந்த அஸ்வின், நடுவில் சற்று இறக்கம் கண்டார். மீண்டும் ஏறி வர இப்படம், ஒரு ஏணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்… மலைப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பேருந்தில் பேருந்து விட்டு பேருந்து தாவிச் செல்வதும், காலி பேருந்தை வில்லன்கள் முட்டித் தள்ளுவதும், சரியான சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாமல் நீதிபதி தீர்ப்பு வழங்குவதும், இந்த பிரச்சனை பூகம்பமாக தமிழகம் முழுவதும் சென்று கொண்டிருக்க ஆளுங்கட்சி தலைவர் பழ கருப்பையா அதை பொருட்டாகவே கருதாமல் இருப்பதும், என லாஜிக் பல இடங்களில் முட்டத்தான் செய்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பிக்கும் தருணத்தில், பேருந்துக்குள் பேசிக்கொண்டே காட்சிகளை நகர்த்தியிருப்பது சற்று சலிப்படைய வைத்திருக்கிறது.
இதையெல்லாம் கடந்து பிரபு சாலமனின் வலி நிறைந்த வாழ்க்கை ஓட்டம் ஒன்று படம் முழுவதிலும் பயணிக்க வைத்திருப்பது அவருக்கான முத்திரை.
ஜீவனின் ஒளிப்பதிவு படத்திற்கான ஜீவனை கொடுத்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசை அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
செம்பி – இதயத்தை பதம் பார்ப்பவள்..





