
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், சரத், விஜி சந்திரசேகர், ஷாலி, வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் தான் “செங்களம்”.
விலங்கு, அயலி என தொடர்ந்து தரமான தொடர்களை தந்து கொண்டிருக்க ஜீ5 தளத்தில் செங்களம் வெளியாகியிருப்பதால் இந்த தொடருக்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவுகிறது…
கதைப்படி,
இரு காலங்களில் நடக்கும் இரு கதைகள் எங்கு சங்கமிக்கின்றன.? எப்படி சங்கமிக்கின்றன.? என்பது தான் இந்த செங்களத்தின் மூலக் களம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்பிக்கிறது இந்த கதைக்களம்.
இன்று என்ற காலத்தில் சகோதரர்களான கலையரசன், டேனியல் மற்றும் லகுபதி மூவரும் மூன்று கொலைகளை செய்து காட்டில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களின் தாயாக வருபவர் தான் விஜி சந்திரசேகர். இந்த கொலை தொடர்ச்சியாக நடக்க, போலீஸார் மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மூவரையும் என் கவுண்டர் செய்யவும் போலீஸ் உயர் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார்… இது ஒருபுறம் நடக்க,
அன்று என்ற ஒரு களம் ஆரம்பித்து ப்ளாஷ் பேக் செல்கிறது..
சிவஞானம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் ஷரத்தின் குடும்பம் அரசியலில் பாரம்பரியம் கொண்ட குடும்பமாக வருகிறது. அப்பகுதியில் பல வருடங்களாக சேர்மன் பதவியில் இருந்து வருகிறது சிவஞானம் குடும்பம்.
சிவஞானத்தின் மூத்த மகனாக வரும் பவன், அப்போது சேர்மனாக இருக்கிறார். பக்கத்து ஊரில் வசித்து வந்த வாணி போஜனை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் பவண். தொடர்ந்து மக்கள் பணிகளை செய்து வரும் பவனை அரசியலில் இருந்து தூக்கியெறிய ஆளுங்கட்சி முற்படுகிறது.. இதற்காக ஆளுங்கட்சி எம் எல் ஏ-வான வேலா ராமமூர்த்தியும் மாவட்டச் செயலாளராக வரும் முத்துக்குமாரும் பல முறை முயற்சி எடுத்தும் அதில் தோல்வியைத் தான் சந்திக்கிறார்கள்.
ஒரு நாள் கார் விபத்தில் சிக்கி பவன், இறந்து விடுகிறார். சேர்மன் பதவி காலியாக.. மீண்டும் தனது குடும்பத்தில் உள்ள ஒருவரே சேர்மனாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் சிவஞானம். அப்போது அங்கு ஒரு பிரளயம் நடக்கிறது.
இந்த அரசியல் களமும் கலையரசன் நடத்தும் இரத்தக்களமும் சந்திக்குமே இடமே இந்த செங்களம்..
எதற்காக இந்த கொலைகள் நடக்கிறது. ? இந்த கொலைகளுக்கும் அரசியல் களத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதே தொடரின் மீதிக் கதை..
நாயகன் கலையரசனின் நடிப்பு அசர வைத்திருக்கிறது.. நெற்றியில் திலகம் வைத்து, கண்ணாடி அணிந்து ஒரு மாஸான வேட்டையை நடத்தியிருக்கிறார் கலையரசன். காதல், எமோஷன், வீரம், வேகம், விவேகம் என பல கோணங்களில் தனது நடிப்புதிறனை திறமையாக வெளிக்காட்டியிருக்கிறார் கலையரசன்.
இவர் ஒரு பக்கம் ஸ்கோர் செய்ய, மற்றொரு பக்கத்தில் வாணி போஜனோ ஒரு பக்கம் இறங்கி அடித்திருக்கிறார். வசன உச்சரிப்பில் சடசடவென பட்டாசு போன்று வெடித்திருக்கிறார். அமைதியாக இருந்து சட்டென ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுத்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று..
விளாத்திக்குளம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ அப்படியே வாழ்ந்து அனைவரும் ஆச்சர்யபடும்படியான ஒரு நடிப்பைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார் விஜி சந்திரசேகர். தன் மகன்களுக்கு சாப்பாடு கொண்டு வரும் காட்சியாக இருக்கட்டும், இவர் கொலை செய்யப்படும் காட்சியாக இருக்கட்டும் இந்த இரண்டு காட்சிகள் போதும் இவரது நடிப்பின் உச்சத்தைக் காண…
கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் காட்சியில் நடித்திருக்கும் நாயகி ஷாலி, பிரம்மிக்க வைத்திருக்கிறார். அவரின் நடை, பேச்சு என அக்கதாபாத்திரத்திற்கே உரித்தான உடல் மொழியில் நடித்து அசத்தியிருக்கிறார்.
மற்றபடி கதையில் நடித்த, ஷரத், பிரேம்குமார், வேலா ராமமூர்த்தி, அர் ஜை, முத்துக்குமார், பக்ஸ், லகுபதி, டேனியல், என தொடரில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு கணம் கதாத்திரங்களின் நேர்த்தியை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மண்வாசனை மாறாமல் அந்தந்த மண்ணுக்கேற்ற படைப்பை கொடுக்க வல்லவரான இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இந்த தொடரை இயக்கியிருக்கிறார். இந்த தொடரிலும் அதை தொடர்ந்திருக்கிறார். நடிகர்களின் தேர்வை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒரு சில தமிழக அரசியல்வாதிகளின் மறுமுகத்தைக் காண்பித்து ஒரு தரமான சம்பவத்தையும் செய்திருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் ஒரு சில விளக்கத்தை இன்னும் சற்று விளக்கமாக கொடுத்திருந்திருக்கலாம்.. பவனை கொன்றது யார்.? விஜி சந்திரசேகரை கொன்றது யார்.? போன்ற கேள்விகளுக்கும் இயக்குனர் பதில் சொல்லிவிட்டுச் சென்றிருந்திருக்கலாம்..
பிற்பாதியில் இருந்த வேகத்தை முற்பாதியிலும் கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருந்திருக்கலாம்.
வெற்றிவேல் மணிகண்டனின் ஒளிப்பதிவு கருவேலங்காட்டுப் பகுதியை கலர் ஃபுல்லாக காட்டியிருக்கிறது.
தரணின் பின்னணி இசை கதைக்கேற்றதாய் கூடவே பயணம் புரிந்தது.
மொத்தத்தில் செங்களம் – புதுமையான களம் என்பதால் ரசிக்க வைத்திருக்கிறது…