
கன்னிமாடம் என்ற படத்தினை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் , இயக்கிய அடுத்த படம் தான் சார். இப்படத்தில், விமல், சாயா தேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன், விஜய் முருகன், சரவண சக்தி, பிரணா, எலிசெபத் நடித்திருக்கிறார்கள்.,
சித்து குமாரின் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்/
SSS Pictures சார்பில் சிராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணிக்கலாம்…
புதுக்கோட்டை அருகே மாங்கொல்லை என்ற கிராமத்தில் கதை நகர்கிறது. 1980ஆம் காலகட்டத்தில் கதை செல்கிறது.
சரவணனின் மகனாக வருகிறார் விமல். சொந்த ஊரில் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ரிட்டையர்ட் ஆகிறார் சரவணன்.
தான் வளர்த்த பள்ளியை தன் மகனான விமலை அங்கு அமர்த்தி விட்டுச் செல்கிறார் சரவணன். அப்பள்ளியை, சிவபாலனின் வம்சத்தினர் இடிக்க நினைக்கின்றனர்.
தன்னுடைய சமூகமே எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும், கல்வி அறிவை கொடுத்து கீழ் சமூகத்தை சமமாக வர விடக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறது சிவபாலனின் குடும்பம். அதற்காக மதத்தை கையில் எடுக்கிறது சிவபாலனின் குடும்பம்.
சிவபாலனின் பேரனாக வருகிறார் சிராஜ். சிராஜும் விமலும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.
விமல் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்ததும், அங்கு புதிதாக பணிக்கு சேரும் சாயா தேவியை கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார்.
விமலின் அப்பாவாக வரும் சரவணன் விபத்தில் சிக்கி விடுகிறார். அதன்பிறகு, பள்ளியின் மகத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார் விமல்.
இதனைத் தொடர்ந்து பள்ளியை இடிக்கத் துடிக்கும் கயவர்களிடம் இருந்து பள்ளியை விமல் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விமல், இக்கதைக்கேற்ற சரியான ஹீரோ தான்.. வேகம், காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பல கோணங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
இருந்தாலும், ஆங்காங்கே எட்டிப் பார்த்த ஓவர் ஆக்டிங்க் காட்சிகளை சற்று குறைத்திருந்திருக்கலாம்.
நாயகி சாயா தேவி, கண்களால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ரசனையை அள்ளித் தெளித்திருக்கிறார்.
மிகவும் கூர்ந்து கவனிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசரடித்திருக்கிறார் சரவணன். கல்வியைப் பற்றி கூறும் ஒவ்வொரு இடத்திலும் நடிப்பில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்.
மேலும், படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் சிராஜ். இவர் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கிறார். தனது காட்சி ஒவ்வொன்றிலும் கண்களால் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு தரமான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
படத்தின் வசனங்கள் மிகவும் கவனிக்கும்படியாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம். மதம், ஜாதி, கல்வி என மூன்றையும் கையில் எடுத்து அதில் எது மனிதனுக்கு தேவை என்பதை ஆணி அடித்தாற் போல் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.
திரைக்கதையில் ஆங்காங்கே தடுமாறியிருந்தாலும், கதை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கூறியே ஆக வேண்டும்.
நளதமயந்தி பற்றி பேசும் காட்சியில் வரும் சிறுவனின் நடிப்பு ஈர்த்தது. பின்னணி இசையானது கதையோடு நாமும் பயணிக்க கைகொடுத்தது.
பாடல்கள் ரசிக்க வைத்திருக்கிறது.
1980 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றதில் ஒளிப்பதிவாளரின் பங்கு பெரிதாக இருக்கிறது.
சார் – சல்யூட்