
நடிகர் சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
மரியாதை நிமித்தமாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் நடத்தவுள்ள விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் சிவகார்த்திகேயனைச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் கே.பி.பி. நவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயனைத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணையுமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவகார்த்திகேயன், சங்கத்தில் பாடலாசிரியராகத் தன்னை இணைத்துக்கொண்டார்.
மேலும், எழுத்தாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காகச் சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார். சங்கம் நடத்தவுள்ள விழாவில் கலந்துகொள்வதாகவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.
சந்திப்பின் நிறைவில் சிவகார்த்திகேயனை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்ததாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் எனத் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையுடன் வலம் வரும் சிவகார்த்திகேயன், பல திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.





