
திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். உதவி தேவைப்படும் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 46-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை தியாகராய நகர் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக அரங்கில் வைத்து நேற்று மாலை (செப்டம்பர் 04) நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ரூ. 1,00.000/- நிதி உதவியும், தருமபுரி, விழுப்புரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் ‘வாழை’ தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000/- நிதி உதவியும் வழங்கப்பட்டது. மூத்த ஓவிய கலைஞர் ‘மணியம்’ செல்வன் அவர்களின் கலை பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000/- நிதி நல்கை வழங்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி மேல்நெல்லிமரத்தூரில் அமைந்திருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 40,000/- வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக, திரைக்கலைஞர் கார்த்தி வரவேற்று பேசியதாவது, “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’தொடர்ந்து, பிளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 2005-இல் அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்ட பிறகு ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ பணிகளை அகரம் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்பதை கடந்து, எந்த சூழலில் இருந்து படித்து வருகிறார்கள் என்பதை கண்டறிந்து, அவர்களில் வருடத்திற்கு 25 நபர்களுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறோம் என்றார்.
மூத்த ஓவிய கலைஞர் மணியம் செல்வன் அவர்களின் கலைப் பணிகளை பாராட்டி திரைக்கலைஞர் சிவகுமார் பேசியதாவது, வாழையடி வாழையாக ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக ஓவியக் கலை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மணியம் செல்வன் அவர்கள் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கில வார, மாத இதழ்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார். பென்சில், வாட்டர் கலர், ஸ்கெட்ச், அக்ரலிக், ஆயில் பெயிண்ட், Airbrush என அனைத்து விதமான வரை கலை திறன் உள்ளவர். திரைப்படங்களில் பங்களித்துள்ளார். இந்தியா மற்றும் உலகெங்கும் ஓவியக்கலை அவரை அழைத்து சென்றிருக்கிறது. அவரது கலை பங்களிப்புகளை பாராட்டுவதில் பெருமையடைகிறேன் என்றார்.
நிகழ்வில் திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ பரிசளிப்பு விழா முதலில் எங்கள் வீட்டில் இருந்து நடக்கும். தமிழ்நாடு முழுவதும் இருந்து ஜெயிச்சவங்க குடும்பம், குடும்பமா வருவாங்க. வந்து சான்றிதழ் வாங்கிட்டு போவாங்க. அதெல்லாம் பசுமையா நினைவில் இருக்கிறது. இந்த கட்டிடத்தை ஒரு தாய் வீடு மாதிரி, ஏணியா பார்க்கிறேன். நிறைய கனவுகள் நனவாகறத பார்க்கிறேன். நாம என்ன பார்க்கிறோமோ, எதை நினைக்கிறோமோ அது ஒரு விளைவை ஏற்படுத்தும். தனியா நாம ஜெயிக்க முடியாது. ஒரு கூட்டு முயற்சி தான் வெற்றி பெறும். நம்ம கூட இருக்கவங்கட்ட இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கிட்டு பயணிச்சா நமக்குன்னு ஒரு பாதை உண்டாகும். நேர்மறையாக இருங்க. எத்தனை கஷ்டமான சூழல் இருந்தாலும், மனவலிமை அத்தனையும் கடந்து ஜெயிக்க வைக்கும். வாழ்க்கை நமக்கு நிறைய விஷயங்கள் கற்று கொடுக்கும். இன்றைக்கு இல்லேன்னாலும், நாளை நீங்க ஜெயிச்சு வருவீங்க. நம்பிக்கையோட நல்ல உறவுகள், நல்ல நட்புகள் வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கை அழகா மாறும். உடல் நலம், குடும்பம், உறவுகள் என அனைத்துக்கும் நேரம் ஒதுக்கி சமநிலையோட வாழ்க்கையை அணுகுங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் பாலாவினோதன் நன்றி கூறினார். விழா நிகழ்வை சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி சிஞ்சுஶ்ரீ மற்றும் சென்னை ஆல்பா கலை அறிவியல் கல்லூரி மாணவர் ப்ளசன் இருவரும் தொகுத்து வழங்கினர். ஓவியர்கள் ஜெயராஜ், ராமு, ஷ்யாம், பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.