திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற பருத்திவீரன் சுஜாதா, தற்போது சன் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான ‘டாப் குக் டூப் குக் ‘ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் வென்று டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஓரிரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டிருந்த பருத்திவீரன் சுஜாதா முதல் முறையாக பங்குபெற்ற முழுநீள பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். அதில் நடக்கும் சமையல் போட்டியில் ஆரம்பத்தில் இவர் எளிதாக வைத்த பூசணிக்காய் சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இப்போது அவரே டைட்டில் வின்னராகி இருப்பதுதான் ஆச்சரியம்.
அவரிடம் பேசியபோது:
சினிமாவில் இருந்து டிவி வந்து ,இந்த ஷோவில் கடந்து வந்த பாதை எப்படி உள்ளது?
நான் மதுரையில் இருந்து கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் அழைக்கும் போது,சென்னை வந்தோ அல்லது பிற ஊர்களுக்குச் சென்றோ நடித்துக் கொடுத்து வருகிறேன். மற்றபடி என் குடும்பம் மதுரையில் தான் இருக்கிறது.
இந்நிலையில் பலரும் என்னை டிவி ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். ஏன் பிக் பாஸுக்குக்கூட கடந்த முறை எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் , தேதிகள் சரியாக அமையாது. அதனால் நடிக்கும் படங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தவிர்த்து வந்தேன் . அதனால் இப்படிப்பட்ட டிவி ஷோக்களில் பங்கெடுப்பதில் நிறைய தவிர்த்தது உண்டு. அப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் குக்வித் கோமாளி ஷோ தயாரித்த மீடியா மேசன்ஸ் குழுவினர் என்னை பலமுறை அழைத்தார்கள். முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது உண்மைதான்.பிறகு நிகழ்ச்சிக்குள் போகப் போக ஈடுபாடு வந்து விட்டது.இதோ டைட்டில் வின்னர் வரை வந்திருக்கிறது.
சமையல் நிகழ்ச்சியில் வென்ற நீங்கள் வீட்டில் எப்படி சமைப்பீர்கள்?
சமையல் என்பது சுமையல்ல, அது ஒரு கலை.,
எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் அதுவும் ஈடுபாட்டோடு புதுமையாக செய்வது பிடிக்கும். குறிப்பாக அசைவம் நன்றாகவே சமைப்பேன்.இது நிஜமா பொய்யா என்று என் வீட்டில் வந்து கேட்டுப்பாருங்கள். ஆனால் வீட்டில் சமைப்பது என்பது வேறு… போட்டியில் சமைப்பது என்பது வேறு அல்லவா?
நன்றாக சமைக்க கூடிய நீங்கள் அந்த ஷோவில் நீங்க செய்த சாம்பாருக்காக விமர்சிக்கப்பட்டீர்கள் . அப்போதைய உணர்வு எப்படி இருந்தது ?
ஆரம்பத்தில் அந்த ஷோ எனக்குப் பிடிபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நான் புரிந்து கொள்ளவே நான்கைந்து வாரங்கள் தேவைப்பட்டன. அதனால் நான்கைந்து எபிசோட்கள் அவ்வளவு சுவாரசியமாக நான் பங்களிப்பு செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். அதாவது வீட்டில் செய்யக் கூடிய கறி தோசை, அடை தோசை, கார்லிக் சிக்கன் என்று வழக்கமாக வீட்டில் செய்வது போல் தான் ஆரம்பித்தேன். அப்படி ஒரு புரிதல் இல்லாமல் தான் நான் வந்து சாம்பார் வைத்தேன். அதற்காக செஃப் வெங்கடேஷ் பட் சார் மிக எளிதாக வீட்டு சமையலாகவே செய்கிறீர்கள் என்று கூறியது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அந்த வார்த்தைகள் யோசிக்க வைத்தது.
நான் பொதுவாக வீட்டில் ஆர்வமாக சமைக்கக் கூடியவள் தான். நம் சமையல் குறை சொல்லி விமர்சிக்கப்பட்டதே என்று எனக்கு வருத்தமாக மட்டுமல்ல கோபமாகவும் இருந்தது .எனக்குள் என்ன பிரச்சினை என்று யோசிக்க ஆரம்பித்தேன். எனது ஈகோவைத் தூண்டி விட்டது போல் நினைத்தேன்.என்னால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்குள் அந்த ஆர்வம் ஈடுபாடாக மாறி ஒரு கட்டத்தில் வெறியாகவே ஆனது. எனக்குள் ஒரு ரோஷம் வந்து விட்டது. எப்படியாவது சமையலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கினேன். நிறைய சமையல் குறித்து தேட ஆரம்பித்தேன்.இந்த விஷயத்தில் என் மகள்களும் உதவினார்கள்.என் கணவரும் ஆதரவாக இருந்தார்.ஏகப்பட்ட புதிய ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்தேன்.
இது மாதிரி ஷோக்களின் போட்டிகளில் வேறு ஒன்றையும் பார்ப்பார்கள்.
சமையலில் முக்கியம் ருசி தான். ஆனால் ருசி நன்றாக இருக்கிறது,பிரசன்டேஷன் நன்றாக இல்லை என்பார்கள். பிறகுதான் தெரிந்தது இப்படி வேறு பல விஷயங்களும் உண்டு என்று. எல்லா விசயங்களையும் தேடிப் பிடித்தேன்.
நீங்கள் சமைத்ததில் உங்களுக்குத் திருப்தி தந்தது எது?
அந்த ஷோவில் நான் சமைக்க ஆரம்பித்து செஃப் ஆஃப் த வீக், என்று தேர்வு செய்யப்பட்டு ஆறு முறை அந்த வாரத்துக்கான சிறந்த சமையல் கலைஞர் பரிசு பெற்றேன்.
நான் செய்த பல டிஷ்கள் பாராட்டப்பட்டன.ராவியோலி பாஸ்தா,குதிரைவாலி அரிசி கொண்டு செய்த பிரௌனி கேக், ஐஸ்கிரீம்,ஆந்திரா பச்சை மிளகாய் கொண்டு செய்த மெர்சிகா சால்னா,வெற்றிலை சேர்மானத்தில் திணைமாவில் செய்த பேன் பனகோட்டா சென்னை ராயபுரம் மீண் விருந்து செம்பருத்தி அலாஸ்கா போன்றவை பெரிதாகப் பாராட்டப்பட்டன ..
குதிரைவாலி அரிசியில் பொங்கல், புட்டு, கஞ்சி தான் செய்வார்கள். அதில் நான் செய்த பிரவுனி கேக் பெரிதாக பாராட்டப்பட்டது. யாரும் அதை நம்பவே இல்லை. அதில் செய்த ஐஸ்கிரீமை அந்த அளவுக்குப் பாராட்டினார்கள்.பொதுவாக எனக்கு பேக்கரி அயிட்டங்களிலேயே ஆர்வம் இருந்ததில்லை. இதற்காக இறங்கி பிறகு தீவிரமாகக் தேடினேன். அந்தத் தேடலின் விளைவு தான் அது.சமையல் பற்றிய
அந்த ஆர்வத்தைக் கடைசி வரை குறையாமல் வைத்திருந்ததால் தான் நான் கடைசியில் டைட்டில் வின்னர் ஆனேன். அப்போது நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் சார் ,பேசும்போது ஆரம்பத்தில் நான் வைத்த ஒரு சாம்பாரை விமர்சித்தது பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். இதிலிருந்து ஒருவரது ஈகோவைத் தூண்டி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று சாதிப்பார்கள் என்றும் கூறினார்.
இது மாதிரி ஷோக்களில் போட்டியாளர்களை வெளியேற்ற எலிமினேஷன் ரவுண்டு என்று ஒன்று கொண்டு வந்து பங்கேற்பாளர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவார்கள்..அந்த அனுபவம் எப்படிஇருந்தது ?
நான் இரண்டு முறை நான் எலிமினேஷன் ரவுண்டுக்கு,அதாவது வெளியேற்றப்படும் சுற்றுக்குச் சென்றேன். அதையும் தாண்டி தான் நான் முன்னேறினேன். அப்போது ஒரு பதற்றமும் பயமும் எனக்கு இருக்கத்தான் செய்தது.திரைப்படங்களில் நடிக்கும் போது அந்த மாதிரி மன அழுத்தம் எல்லாம் இருக்காது.
இந்த நிகழ்ச்சியில் உங்களைச் சுதந்திரமாகச் சமைக்க விடாமல் டூப் குக்குகளின் காமெடி இடையூறு வேறு இருந்திருக்குமே ?
அந்த நிகழ்ச்சியின் தன்மையே அது தான்.
டூப் குக்குகளின் கோமாளித்தனங்கள் இடையூறுகள் இவற்றைக் கடந்து தான் இதில் சமைத்து வெற்றியும் பெற வேண்டும் .ஒரு வகையில் இது தடை தாண்டி ஓடுவது போலத்தான்.அப்படி அவர்கள் கோமாளித்தனங்கள் செய்யும்போது பலரை நான் திட்டி இருக்கிறேன் அடித்திருக்கிறேன். நடுவரையே கூட ஆள் தெரியாமல் இதுபோல நான் திட்டி இருக்கிறேன். பொதுவாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு நாடகம் போல் இருக்கும் என்று முதலில் நினைத்தேன். என்ன பேச வேண்டும்… எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுவார்கள்.அதன்படி செய்ய வைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நம் விருப்பப்படி சுதந்திரமாகப் பேசலாம். ரியாக்ட் செய்யலாம். என்ன தோன்றுகிறதோ அதை இயல்பாக பேசலாம்,அப்படியே நடந்து கொள்ளலாம் .அது எனக்கு வசதியாக இருந்தது. இதனால் சில சமயம் சிலரை எல்லை மீறிப் பேசி திட்டி இருக்கிறேன். அனைவரும் ஒரு குடும்பத்தினர் போல் ஆகி விட்டதால் அவர்கள் அதை எளிதாக எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இருவர் சேர்ந்து அந்த டைட்டில் வின்னர் பரிசைப் பகிர்ந்து கொண்டது பற்றி?
அந்தப் பையன் என்பி என்கிற நரேந்திர பிரசாத், மிகவும் உற்சாகமானவன், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். பதட்டம் இல்லாத தம்பி. நாங்கள் அனைவரும் குடும்பத்தினர் போல் இருந்தாலும் அவன் மட்டும் என் மகனைப் போல் மாறி விட்டான். என் மகனுடன் சேர்ந்து இந்த டைட்டில் வின்னர் பரிசைப் பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி தான். அங்கே இருந்த அனைவரும் குடும்பத்தினர் போல் ஆகிவிட்டதால் யார் பரிசு பெற்றாலும் தாங்கள் பெற்றதாக அனைவரும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் இருந்தோம்.என்.பி. உற்சாகமான அன்பான இளைஞன். அவனுடன் இணைந்து பெற்றது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது .ஏதோ எனது குடும்பத்தினருடன் பெற்ற உணர்வு இருந்தது.இதற்காக என் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ந்தார்கள்.
இப்போது வெளியில் செல்லும்போது, டிவி நிகழ்ச்சி பற்றி எப்படிப் பேசுகிறார்கள்?
பொதுவாகவே தமிழக மக்கள் படங்களில் என்னைப் பார்த்து தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கிறார்கள். இப்போது சின்னத்திரை மூலம் மிகவும் நெருக்கமாக உணர்கிறார்கள். போகும் இடங்களில் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஜெயிக்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் நன்றாக செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்துவார்கள். நாங்கள் அந்த பைனல் நாளுக்காகக் காத்திருக்கிறோம் என்று சொல்வார்கள். அவர்களது ஆசையும் ஆசீர்வாதமும் இன்று நிறைவேறி இருக்கிறது. இப்போது அவர்களை மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன்.
படப்பிடிப்பு அனுபவங்களில் என்ன வேறுபாடு?
இப்போது நான் நடித்து கோலிசோடா வெப்சீரீஸ் வெளியாகியுள்ளது. இரண்டு படங்கள் வர வேண்டி உள்ளது .மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
திரைப்படம் ,தொலைக்காட்சி இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.திரைப்படங்களில் இயக்குநர் சொல்வதைக் கேட்டு உள்வாங்கி அந்தக் கதாபாத்திரமாக மாறி நடிப்பது ஒரு விதம் என்றால் இதில் நாம் நாமாக இருக்கும் படியான அனுபவமாக இருந்தது .அந்த அனுபவம் புதிதாக இருந்தது. இந்த ஷோவில் நாம் நடிக்க வேண்டியது இல்லை நாம் நாமாக நம்மை வெளிப்படுத்தினால் போதும் என்று இருக்கும். திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது காட்சிகள் இடையே இடைவெளி இருக்கும். இதில் காலை முதல் நள்ளிரவு வரை கூட படப்பிடிப்பு சென்றது உண்டு.அது வேறு வகையான அனுபவமாக இருந்தது.ஒரு குடும்பம் போல் நாங்கள் பழகி எங்களுக்குள் ஒரு புரிதல் வந்துவிட்டது.மீடியா மேசன்ஸ் நிறுவனத்தின் குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில் இயக்குநர் பார்த்திவ் அவர்களுக்கும் சன் டிவிக்கும் நன்றி சொல்ல வேண்டும். நல்லதோ கெட்டதோ,நிறைய குறையோ எப்போதும் வெளிப்படையாக அபிப்பிராயம் சொல்லும் நடுவர்கள் வெங்கடேஷ் பட் சார்,ராம் மோகன் சார், கௌசிக் சார் எனக்கு உறுதுணையாக இருந்த செஃப் ஷெரூபா ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும் .
அதே நேரத்தில் எனக்கு உறுதுணையாக பக்க பலமாக இருந்த எனது மகள்கள் மற்றும் என் கணவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.