Spotlightவிமர்சனங்கள்

வடசென்னை – விமர்சனம் (3.75/5)

இயக்குனர் வெற்றி மாறனின் தனது நீண்ட நாள் கனவு படமாக உருவாகியிக்கும் படம்தான் ‘வட சென்னை’. தனுஷ் தனது சொந்த நிறுவனம் மூலமாக தயாரித்து இப்படத்தில் நடித்திருக்கிறார்.

1980களில் நடக்கும் இந்த கதையின், ஆரம்பக் காட்சியிலேயே நண்பர்களாக வரும் சமுத்திரக்கனி, ஆடுகளம் கிஷோர், பவண், மற்றும் சாய் தீனா நால்வரும் வட சென்னையின் முக்கிய தல’யாக வரும் அமீரை கொலை செய்கின்றனர். கொலையின் பழியை ஏற்றுக் கொண்டு சமுத்திரக்கனியும் பவணும் ஜெயிலுக்குச் செல்கின்றனர்.

கிஷோர், ஜெயிலுக்கு சென்ற சமுத்திரக்கனிக்கு துரோகத்தை இழைத்துவிட, இந்த பகை பல வருடங்களாக நீடிக்கிறது.

அங்குள்ள மக்கள், அமீரின் தம்பி டேனியல் பாலாஜி வட சென்னையின் அமைதியான ஒரு தலைவனாக இருக்கிறார். அமீரின் மனைவி ஆண்ட்ரியாவை சமுத்திரக்கனி திருமணம் செய்துகொள்கிறார்.

இந்த சூழலில் தொண்ணூறுகளின் மத்தியில் கேரம் சாம்பியனாக ஆசைப்படும் இளைஞன் தனுஷ் ஒரு சம்பவத்தால் ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு கிஷோரின் நம்பிக்கை ஆளாக இருந்து அவரை குத்தி சாய்க்கிறார் தனுஷ்.

பின் ஜெயிலில் இருந்து வெளிவரும் தனுஷ், துரோகம், பழி, ரெளடியிசம் என பல இன்னல்கள் துரத்த இதிலிருந்து தனுஷ் வெளியே வந்தாரா இல்லையா என்பதற்கு மீதிக் கதை பதில் சொல்கிறது.

இதுவரை எந்த இயக்குனரும் வெளிக்காட்டாத ஒரு ‘வட சென்னை’யின் முகத்தை வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள், கதை நகர்வு என அனைத்திலும் மிகவும் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார். இந்த கதைக்காக பல வருடங்கள் காத்திருந்தும் அதற்கான பலனும் கைமேலே கிடைத்திருக்கிறது இயக்குனர் வெற்றிமாறனுக்கு.

தனுஷின் நடிப்பை இனியும் புகழ நமக்கு வார்த்தைகள் இல்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் தனுஷ். இப்படத்திற்காக விரைவில் தேசிய விருது வாங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது கெட்-அப்பை மாற்றிக் கொள்வதில் தனுஷ் எடுத்துக் கொண்ட முக பாவனை அனைத்தும், தனுஷுக்கு உரித்தான கைவண்ணம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதல் காட்சியிலேயே தனது கதாபாத்திரம் என்ன என்பதை தெளிவாக காட்டியிருப்பார். வட சென்னையிலேயே வாழ்ந்து விட்டார். வட சென்னையில் ஆண்ட்ரியா எப்படி செட் ஆவார், என்று சந்தேகம் எழுந்தவர்களுக்கு நெத்தியடியில் தனது நடிப்பை பரிசாக கொடுத்திருக்கிறார்.

அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஆடுகளம் கிஷோர், பவன், பாவல், என அனைவருமே வட சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதர்கள் போல் ஒவ்வொரு காட்சிகளிலும் அசரடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு இரண்டு பலம் பக்கபலமாகவே நகர்ந்து வந்திருக்கிறது. ஒன்று இசை மற்றொன்று ஒளிப்பதிவு.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னனி இசையும் நம்மை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறது. வட சென்னை ஏரியாவையும், மெட்ராஸ் ஜெயிலையும் தெள்ளத் தெளிவாக, அது செட் என்பதை நம்ப முடியாத அளவிற்கு வேல்ராஜ்ஜின் கேமரா ஆட்டத்தை காட்டியுள்ளது.

இந்த முதல் பாகத்தில் 2003 ஆம் ஆண்டோடு கதையை நிறுத்தியுள்ள வெற்றிமாறன், அன்பு(தனுஷ்)வின் ஆட்டத்தை அடுத்த பாகத்தில் விரைவில் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

வட சென்னை – ரசிகர்களுக்கான படையல்…

Facebook Comments

Related Articles

Back to top button