
உலகப்போர் நடைபெற்று முடிந்ததும், அதில் வீணாண குண்டுகள், அல்லது வெடிக்காத குண்டுகள் பல, இக்காலங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வெடிப்பதும், அது என்னவென்றே தெரியா மனிதர்கள் அதை உபயோபடுத்தி, வெடித்து பலர் உயிரிழந்த செய்திகள் பலவற்றும் நாம் கண்டிருக்கிறோம்.
அப்படியாக இரண்டாம் உலகப்போரில் மிச்சம் மீதி இருந்த குண்டுகளை வீரர்கள் கடலில் தூக்கியெறிய, அதில் ஒரு குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கி விடுகிறது. அந்த குண்டு, கடைசியாக இரும்பு கழிவுகடைக்கு(காயலான்கடை) வந்தடைகிறது. அங்குதான் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் தினேஷ்.
நாயகன் தினேஷுக்கும் ஆசிரியராக வரும் நாயகி ஆனந்திக்கும் காதல். இவர்களின் காதலுக்கு, ஆனந்தியின் வீட்டில் எதிர்ப்பு.
இவர்களின் காதல் சேரக்கூடாது என்பதற்காக ஆனந்தியை கொல்லக் கூட துணிந்தவர்கள் ஆனந்தியின் குடும்பத்தார். காரணம் தினேஷின் சாதி, செய்யும் தொழில், பொருளாதாரம் உள்ளிட்ட பல.
குண்டை, மக்களுக்கு தெரியாமல் அழிக்க நினைக்கிறது மத்திய அமைச்சரின் கையாளாக வரும் ஜான் விஜய், போலீஸ் அதிகாரி லிஜிஸ் சேர்ந்த ஒரு டீம். காரணம், குண்டு இருப்பது தெரிய வந்தால் தமிழகத்திற்கு வர இருக்கும் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி பாகங்கள் தொழிற்சாலை வராமல் போய்விடும், பல கோடிகளை சுருட்ட முடியாமல் போய்விடும் என்பதற்காக.
இந்த குண்டால் ஏற்படும் பேராபத்தினை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும், என்று குண்டை கண்டுபிடிக்க தீவிரமாக போராடுகிறார் பத்திரிகையாளராக வரும் சமூக போராளி ரித்விகா.
இந்த குண்டு விவகாரத்தில் தினேஷ் எப்படி உள்ளே வந்தார்..?? குண்டு யார் கையில் சிக்கியது..??? அதனால் என்ன நடந்தது..?? தினேஷ் – ஆனந்தி காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை..
அட்டகத்தி, விசாரணை படத்திற்கு பிறகு தினேஷிற்கு நடிப்பிற்கான ஒரு தீணியாக இந்த படம் அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எமோஷ்னல், காதல், கோபம், ஆக்ஷன், காமெடி, என அனைத்திலும் தனது உட்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு லாரி ஓட்டுநர் படும் இன்னல்கள் என்னென்ன, என்பதையும் கண்முன்னே நிறுத்தி செல்கிறார் தினேஷ். வேகமெடுக்கும் வசனங்கள், குடித்துவிட்டு கடையில் செய்யும் ரகளை, ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் கீழே விழுந்து புரள்வதும் என அனைத்திலும் தன்னை கதாபாத்திரத்தோடு ஒன்ற வைத்து அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் வெகுவாக பெறுகிறார்.
பரியேறும் பெருமாள் படத்தில் கதையோடு இணைந்து பயணம் செய்து அனைவரையும் ரசிக்க வைத்த கயல் ஆனந்தி, இந்த படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். கொஞ்சும் தமிழில் கொஞ்சும் காதல் கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுக்கிறார் ஆனந்தி.
சீரியஸாக சென்று கொண்டிருக்கும் கதையில், ஆங்காங்கே டைமிங் காமெடி அடித்து ரசிகர்களை முகத்தில் சிரிப்பை எட்டிப் பார்க்க வைப்பவர் முனிஸ்காந்த். இரும்பு கடையில் உதவியாளராக பணி செய்து வரும் முனிஸ்காந்த், லாரி ஓட்டுநராக வேண்டும் என்பதையே இலட்சியமாக கொண்டிருக்கிறார். தினேஷுடன் லாரியில் பயணம் புரியும் போது முனிஸ்காந்த் அடிக்கும் லூட்டிகள் கலகலப்பூட்டுகின்றன.
போலீஸாக வரும் லிஜிஸ், சமூக போராளியாக வரும் பத்திரிகையாளர் ரித்விகா, சரண்யா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மாரிமுத்து என அனைவரும் படத்தின் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் தான்.
டென்மா இசையில் பாடல்கள் ரகம். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை கொடுத்திருக்கிறார். பின்னனி இசை மிரட்டல்.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். சண்டைக் காட்சிகளாக இருக்கட்டும், சேஸிங் காட்சிகளாக இருக்கட்டும் அனைத்திலும் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.
குண்டு மற்றும் காதல் என இரண்டையும் ஒரு சேர பயணிக்க வைத்து படபடப்பையும் வியப்பையும் தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.
போர் எதற்கு பேரன்பு போதும், ஒரு பூமி தானே அன்பால் அனைவரும் இணைவோம் என்ற வரிகளோடு படத்தை நிறைவு செய்வது, எழுந்து நின்று படக்குழுவினருக்கு கைதட்டலை கொடுக்காமல் இருக்க முடியாது.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – பேரன்பால் இணைவோம்
குடும்பத்தோடு நிச்சயம் பார்க்க வேண்டிய படம்





